எஃப்ஏ கிண்ணம்: முதன்முறையாக இறுதியாட்டத்தில் யுனைடெட், சிட்டி
லண்டன்: இங்கிலாந்தின் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்தில் பரம வைரிகளான மான்செஸ்டர் யுனைடெட்டும் மான்செஸ்டர் சிட்டியும் மோதவிருக்கின்றன.
போட்டியின் வரலாற்றிலேயே இறுதியாட்டத்தில் இவ்விரு குழுக்களும் மோதுவது இதுவே முதல்முறை.
பிரைட்டனும் யுனைடெட்டும் மோதிய அரையிறுதியாட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது. பெனால்டிகளைக் கொண்டு வெற்றியாளர் முடிவுசெய்யப்பட்டது. பெனால்டிகளில் 7-6 எனும் கோல் கணக்கில் வெற்றிபெற்றது யுனைடெட்.
முன்னதாக நடைபெற்ற மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில் ஷெஃபீல்ட் யுனைடெட்டை 3-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது சிட்டி.
இங்கிலாந்து காற்பந்து வரலாற்றிலேயே இங்கிலிஷ் பிரிமியர் லீக், எஃப்ஏ கிண்ணம், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ணம் ஆகிய மூன்றையும் ஒரே பருவத்தில் வென்ற ஒரே குழு என்ற பெருமை யுனைடெட்டுக்கு உள்ளது. இந்தப் பருவத்தில் அந்தச் சாதனையை ஈடுகட்டும் வாய்ப்பு அபாரமாக விளையாடிவரும் சிட்டிக்கு உள்ளது.
எஃப்ஏ கிண்ண இறுதியாட்டத்தில் கூடுமானவரை அதைத் தடுக்கத் தனது குழு பாடுபடும் என்றார் யுனைடெட் நிர்வாகி எரிக் டென் ஹாக்.
ஸ்பர்ஸ் குழுத் தலைவருக்கு அவமானம்
நியூகாசல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் (இபிஎல்) நியூகாசல் யுனைடெட்டிற்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் டோட்டன்ஹேம் ஹாட்ஸ்பர் கண்ட படுதோல்வியை 'அவமானமிக்கது' என்று அதன் குழுத்தலைவர் ஹியூகோ லோரிஸ் வர்ணித்துள்ளார்.
ஸ்பர்சின் தோல்வியால் இபிஎல் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் வருவதற்கான அதன் முயற்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
நியூகாசலை ஸ்பர்ஸ் வென்றிருந்தால் இபிஎல் பட்டியலில் புள்ளி அடிப்படையில் அக்குழுவுடன் ஸ்பர்ஸ் சமநிலை கண்டிருக்கலாம். ஆனால், ஆட்டம் தொடங்கி 21 நிமிடங்களிலேயே ஸ்பர்சுக்கு எதிராக ஐந்து கோல்கள் விழுந்தன. ஆட்ட முடிவில் 6-1 எனும் கோல் கணக்கில் நியூகாசல் அபார வெற்றி கண்டது.

