ஜோகூர் பாரு: வெறும் 1,000 ரிங்கிட்டுக்கு (301 வெள்ளி) ஒருவர் சிறு படகில் சட்டவிரோதமாக இந்தோனீசியாவிலிருந்து மலேசியாவின் ஜோகூர் மாநிலத்துக்குள் நுழையமுடிகிறது.
இவ்வாறு ஒருவரை ஜோகூருக்குக் கொண்டு செல்ல அத்தொகை நடுத்தரகர்களுக்கு வழங்கப்படுகிறது. சட்டவிரோதமாக வெளிநாட்டவரை அழைத்துவருவதற்குத் தேவையான ஏற்பாடுகளை நடுத்தரகர்கள் செய்வதாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் கமாருல் ஸாமான் மாமாத் தெரிவித்துள்ளார்.
எப்படியாவது மலேசியாவுக்குள் நுழையவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்போருக்கு நடுத்தரகர்கள் கட்டணத்தை 4,000 ரிங்கிட் வரை உயர்த்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சட்டவிரோதமாக மலேசியா செல்ல எத்தகைய படகுகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் கருத்தில்கொண்டு கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று ஜோகூர் மாநிலத்துக்கான அந்நாட்டின் 'எம்எம்இஏ' எனும் கடல்துறை அமலாக்க அமைப்பின் இயக்குநர் ஃபர்ஸ்ட் அட்மிரல் நுருல் ஹிஸாம் ஸக்காரியா தெரிவித்தார்.
"விசாரணை, கைது நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி கட்டணம் 3,000 ரிங்கிட்டைத் தாண்டக்கூடும்," என்று அவர் சொன்னார்.
இம்மாதம் முதல் தேதியிலிருந்து 30ஆம் ேததிவரை சட்டவிரோதமாக மலேசியாவிற்குள் நுழைவோரையும் அங்கிருந்து வெளியேறுவோரையும் பிடிக்க கடல்துறை அமலாக்க அமைப்பு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் திரு கமாருல் கூறினார்.
மிகக் குறைவான தொகையில் சட்டவிரோதமாக ஜோகூர் செல்லும் வெளிநாட்டவர்

