இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நிகழ்ந்த இரண்டு வெடிப்புகளில் குறைந்தது 17 பேர் மாண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு அலுவலகத்தில் வெடிப்புகள் நிகழ்ந்தன.
இது ஒரு தாக்குதல் என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று காவல்துறையினர் கூறினர். மின்சாரக் கோளாறு ஏற்பட்டதால் அலுவலகத்தில் இருந்த ஆயுதங்கள் தீப்பிடித்து வெடிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மாண்டோரில் பெரும்பாலோர் காவல்துறை அதிகாரிகள்.
இச்சம்பவம் ஸ்வாட் பள்ளத்தாக்கில் நேர்ந்தது. 2009ஆம் ஆண்டுவரை இப்பகுதி இஸ்லாமியப் போராளிகளின்வசம் இருந்தது.
இச்சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கட்டடங்கள் இடிந்து விழுந்தன. பொதுமக்களில் நால்வரும் மாண்டனர்.
"வெளியிலிருந்து எவரும் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை," என்று கைபர் பக்துன்க்குவா மாநிலக் காவல்துறையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். அம்மாநிலம் அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கு அருகே உள்ளது.
பாகிஸ்தானில் இயங்கும் தலிபான் அமைப்பு கடந்த சில மாதங்களாக அந்நாட்டின் பாதுகாப்புப் படைகளைக் குறிவைத்துத் தாக்குதல்களை நடத்தியது. இந்த வெடிப்புகளுடன் தங்களுக்குத் தொடர்பு இருப்பதாக அது கூறவில்லை.
இச்சம்பவம் பயங்கரவாத செயலைப் போல் தெரியவில்லை என்று இப்பகுதிக்கான பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவர் சொஹாய்ல் காலிட், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் சொன்னார்.

