செல்சி நிர்வாகியாகப் பொறுப்பேற்கும் நிலையில் பொக்கெட்டினோ
லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான செல்சி, அதன் அடுத்த நிர்வாகியாக மொரிச்சியோ பொக்கெட்டினோவை நியமிக்க அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. அர்ஜென்டினாவைச் சேர்ந்த பொக்கெட்டினோ முன்னதாக பிரான்சின் பிஎஸ்ஜி குழுவின் பயிற்றுவிப்பாளராக இருந்தவர்.
இந்தப் பருவம் மிகவும் மோசமாக விளையாவரும் செல்சி சில வாரங்களுக்கு முன்பு நிர்வாகி கிராஹம் போட்டரை பணிநீக்கம் செய்தது. ஃபிராங்க் லேம்பார்ட் தற்காலிகமாக அப்பொறுப்பை வகிக்கிறார்.
தற்காலிக நிர்வாகியையும் பணிநீக்கம் செய்த ஸ்பர்ஸ்
லண்டன்: சில வாரங்களுக்கு முன்பு தனது நிர்வாகி அன்டோனியோ கோண்டேயைப் பணிநீக்கம் செய்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான டாட்டன்ஹம் ஹாட்ஸ்பர், இப்போது தற்காலிக நிர்வாகி கிரிஸ்டியன் ஸ்டெலினியையும் (படம்) பணிநீக்கம் செய்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற பிரிமியர் லீக் ஆட்டத்தில் நியூகாசல் யுனைடெட்டிடம் 6-1 எனும் கோல் கணக்கில் படுதோல்வி கண்டது ஸ்பர்ஸ். அதிலும் பலருக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஆட்டத்தின் முதல் 21 நிமிடங்களுக்குள்ளேயே 5-0 எனும் கோல் கணக்கில் முன்னுக்குச் சென்றது நியூகாசல்.
அந்த ஆட்டத்திற்குப் பிறகு ஸ்டேலினி வேலையை இழந்தார். சிக்கலில் மூழ்கியிருக்கும் ஸ்பர்சின் நிலை மேலும் மோசமடைந்துள்ளது.
குறைவான ஓட்டம், விறுவிறுப்பான ஆட்டம்; டெல்லி வெற்றி
ஐதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்சும் டெல்லி கேப்பிட்டல்சும் மோதிய ஆட்டத்தில் ஓட்டங்கள் அதிகம் இல்லை. இருந்தாலும் மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இந்த ஆட்டத்தில் ஏழு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிகண்டது டெல்லி.
முதலில் பந்தடித்த இக்குழு ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ஓட்டங்களை எடுத்தது. அதற்குப் பிறகு ஐதராபாத் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ஓட்டங்களை எடுத்தது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் வென்றுள்ளது டெல்லி.

