'எதிரி' கப்பலை மூழ்கடித்த அமெரிக்க, பிலிப்பீன்ஸ் படைகள்

'எதிரி' கப்பலை மூழ்கடித்த அமெரிக்க, பிலிப்பீன்ஸ் படைகள்

2 mins read
7cfd92a4-8f9d-4218-9923-4a5d86e2abeb
-

மணிலா: ராணு­வப் பயிற்­சிக்­காக பாவனை எதி­ரிக் கப்­பலை அமெ­ரிக்க, பிலிப்­பீன்ஸ் படை­கள் மூழ்­க­டித்­துள்­ளன. இரு­நாட்­டுப் படை­களும் ஏவு­கணை பாய்ச்­சி­யும் வெடி­குண்­டு­களை வீசி­யும் அதைச் செய்­தன.

அமெ­ரிக்­கா­வும் பிலிப்­பீன்­சும் மேற்­கொள்ளும் கூட்டு ராணு­வப் பயிற்­சி­யின் முக்­கிய அங்­க­மாக இந்­நி­கழ்வு இடம்­பெற்­றது. தென்­சீ­னக் கட­லில் அந்த பாவனைப் போர்க்­கப்­பல் மூழ்­க­டிக்­கப்­பட்­டது.

தென்­சீ­னக் கட­லில் மணி­லா­வும் வாஷிங்­ட­னும் முதன்­மு­றை­யாக பாவ­னைத் தாக்­கு­தலை மேற்­கொண்­டுள்­ளன. அக்கடலின் பல பகு­தி­களை சீனா­வும் பிலிப்­பீன்­சும் சொந்­தம் கொண்­டாடி வரு­கின்­றன.

'பலிக்­கத்­தான்' எனும் இந்­தக் கூட்டு ராணு­வப் பயிற்­சி­யில் பாவ­னைக் கப்­ப­லாக இடம்­பெற்­றது செயல்­பாட்­டி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்ட பிலிப்­பீன்­சின் 'பிஆர்பி பங்­கா­சி­னான்' போர்க்­கப்­பல். ஸம்­பா­லெஸ் மாநி­லத்­தின் கரை­யோ­ரப் பகு­தி­யி­லி­ருந்து சுமார் 20 கிலோ­மீட்­டர் தொலைவில் அது மூழ்­கடிக்­கப்­பட்­டது.

கிட்­டத்­தட்ட ஆறு மணி­நேரம் நீடித்த கூட்டு ராணு­வப் பயிற்­சி­யின் பெரும்­பா­லான அங்­கங்­களை பிலிப்­பீன்ஸ் அதி­பர் ஃபெர்டி­னெண்ட் மார்க்­கோஸ் ஜூனி­யர் நேரில் பார்­வை­யிட்­டார். அவ­ரு­டன் பிலிப்­பீன்­சுக்­கான அமெ­ரிக்­கத் தூதர் மேரிக்கே கார்ல்­ச­னும் பிலிப்­பீன்ஸ் தற்­காப்பு அமைச்­சர் கார்­லிட்டோ கால்­வெஸ் ஜூனி­ய­ரும் இருந்­த­னர்.

எனி­னும், படை­கள் பாவ­னைப் போர்க்­கப்­பலை மூழ்­க­டிப்­ப­தற்கு முன்பு திரு மார்க்­கோஸ் கிளம்பி­விட்­டார். அவ­ருக்கு வேறு நிகழ்வில் பங்­கேற்க வேண்­டி­யிருந்­தது.

பலிக்­கத்­தான் ராணு­வப் பயிற்சி ஆண்­டு­தோ­றும் நடை­பெற்று வரு­கிறது. 38வது ஆண்­டாக நடை­பெ­றும் இதில் பிலிப்­பீன்ஸ் அதி­பர் கலந்­து­கொள்­வது அரிது.

திரு மார்க்­கோஸ் அவ்­வாறு செய்­தது அவர் முன்­னைய பிலிப்­பீன்ஸ் அதி­பர் ரோட்­ரிகோ டுட்­டார்ட்­டே­யின் போக்­கி­லி­ருந்து மாறு­ப­டு­வதை வலி­யு­றுத்­து­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. திரு டுட்­டார்ட்டே, சீனா­வு­டன் நட்பு வைத்­துக்­கொள்­வ­தில் அதிக அக்­கறை காண்­பித்­தார்.