விளையாட்டுள் துளிகள்

விளையாட்டுள் துளிகள்

2 mins read
e4fb7650-1a49-4460-8654-4a0547a240f6
-

அடிமட்டத்திலிருந்து மீண்டு உயரப் பறக்கும் ஆஸ்டன் வில்லா

பர்மிங்ஹம்: இந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பருவத்தைப் படுமோசமாகத் தொடங்கிய ஆஸ்டன் வில்லா நன்கு மீண்டு வந்தது மட்டுமின்றி 13 ஆண்டுகளில் முதன்முறையாக ஐரோப்பியக் காற்பந்துப் போட்டிகளில் ஒன்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பையும் உருவாக்கிக்கொண்டுள்ளது.

பிரிமியர் லீக் பட்டியலில் முதல் ஏழு இடங்களுக்குள் முடிக்கும் குழுக்கள் அடுத்த பருவம் மூன்றில் ஓர் ஐரோப்பிய போட்டிக்குத் தகுதிபெறும். தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ள வில்லா, பருவத்தின் இறுதியில் ஐந்து அல்லது ஆறாம் இடத்தில் முடித்தால் யூயேஃபா யூரோப்பா லீக் போட்டிக்குத் தகுதிபெறும்.

கடந்த 13 ஆண்டுகளாக வில்லா ஐரோப்பியப் போட்டிகளுக்குத் தகுதிபெறவில்லை.

நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஃபுல்ஹமை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது வில்லா. அதைத் தொடர்ந்து இக்குழு லீக் பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது.

வில்லா இப்பருவத்தை மோசமாகத் தொடங்கிய பிறகு முன்னைய நிர்வாகி ஸ்டீவன் ஜெரார்ட் பணிநீக்கம் செய்யப்பட்டார். அதற்குப் பிறகு நிர்வாகியாக நியமிக்கப்பட்ட யுனாய் எமரி குழுவை அபாரமாக விளையாட வைத்துள்ளார்.

ஐபிஎல்: இதுவரை இல்லாத அளவில் ஓட்டங்களைக் குவித்த குஜராத்

அகமதாபாத்: ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சைத் திக்குமுக்காட வைத்துள்ளது குஜராத் டைட்டன்ஸ்.

முதலில் பந்தடித்த ஐபிஎல் நடப்பு வெற்றியாளரான குஜராத், ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ஓட்டங்களை எடுத்தது. இக்குழு, ஐபிஎல் ஆட்டத்தில் இத்தனை ஓட்டங்களை எடுத்தது இதுவே முதல்முறை.

அதற்குப் பிறகு பந்தடித்த மும்பை ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

34 பந்துகளில் 56 ஓட்டங்களை எடுத்தார் குஜராத்தின் ஷுப்மன் கில். அதோடு, 22 பந்துகளில் 46 ஓட்டங்களைக் குவித்தார் இக்குழுவின் டேவிட் மில்லர்.

ஐபிஎல் விருதை ஐந்து முறை வென்றிருக்கிறது மும்பை. கடந்த ஆறு ஆண்டுகளில் அக்குழு இவ்வளவு அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்விகண்டதில்லை.

ஆகக் கடைசி நிலவரப்படி ஐபிஎல் பட்டியலில் ஏழாம் இடத்தில் இருக்கிறது மும்பை. அதேவேளையில் கடந்த ஏழு ஆட்டங்களில் ஐந்தில் வெற்றிகண்டுள்ளது குஜராத் டைட்டன்ஸ்.