தைப்பே: சீனாவின் இறையாண்மைக்கும் அதன் வட்டாரங்களுக்கும் ஆபத்து எழுகிறதா என்பதை அதிகாரிகள் மிகவும் உன்னிப்பாகக் கண்காணிப்பர் என்றும் தேவைப்படும்போது நிலைமையைக் கையாளத் தயார்நிலையில் இருப்பர் என்றும் அந்நாட்டின் தைவான் விவகார அலுவலகம் கூறியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளின் கடற்படைக் கப்பல்கள் தைவான் நீரிணையில் வலம் வரவேண்டும் என்று கூறி ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிரான்சின் லெ ஜர்னல் டு டிமான்ஷே நாளிதழில் வெளியானது.
அதைத் தொடர்ந்து சீனா இவ்வாறு பதிலளித்துள்ளது.
தைவான் தனக்குச் சொந்தமான பகுதி என்று சீனா கூறி வருகிறது. அதை வலியுறுத்த கடந்த மூன்று ஆண்டுகளாக அந்நாடு ராணுவ ரீதியாக நெருக்குதல் அளித்து வருகிறது.
இந்நிலையில், இவ்வாண்டின் ஹான் குவாங் ராணுவப் பயிற்சிகளில் தைவான் முற்றுகையிடப்பட்டால் அதைக் கையாள்வதற்கான ராணுவ நடவடிக்கைகளிலும் தைவான் படைகளின் போர்த்திறனைக் கட்டிக்காப்பதிலும் அதிக கவனம் செலுத்தப்படும் என்று அதன் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தைவான் அதிபர் சாய் இங் வென், அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் கெவின் மெக்கார்த்தியை அந்நாட்டில் சந்தித்தார். அதைத் தொடர்ந்து சீனா, தைவானை முற்றுகையிடும் பயிற்சிகள் உள்ளிட்டவற்றில் இம்மாதம் ஈடுபட்டது.
இவ்வாண்டின் ஹான் குவாங் பயிற்சிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என்று தைவான் தற்காப்பு அமைச்சு கூறியது.
முதற்கட்டப் பயிற்சிகள் அடுத்த மாதம் 15ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதிவரை நடைபெறும். இரண்டாம் கட்டப் பயிற்சிகள் வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதிவரை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

