கியவ்: ரஷ்யா உக்ரேன்மீது படையெடுத்த பிறகு முதன்முறையாக சீன அதிபர் ஸி ஜின்பிங், உக்ரேன் அதிபர் வொலொடமிர் ஸெலென்ஸ்கியுடன் பேசியுள்ளார். சீனாவைச் சேர்ந்த ஒரு குழுவை உக்ரேனுக்கு அனுப்ப திரு ஸி திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டது.
சீனா என்றுமே அமைதியின் பக்கம்தான் நின்றிருக்கிறது எனத் திரு ஸி கூறியதாக சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் நேற்று தெரிவித்தது.
"உக்ரேன் நெருக்கடியைப் பொறுத்தவரை சீனா என்றுமே அமைதியின் பக்கம்தான் நின்றுள்ளது. அமைதிக்கான பேச்சுவார்த்தை நடத்த ஊக்குவிப்பதே சீனாவின் நிலைப்பாடு," என்று திரு ஸெலென்ஸ்கியுடனான தொலைபேசி உரையாடலின்போது திரு ஸி கூறியதாக சிசிடிவி ஊடகம் குறிப்பிட்டது.
உக்ரேனுக்கும் மற்ற நாடுகளுக்கும் சீனாவைப் பிரதிநிதிக்கும் குழு அனுப்பப்படும் என்று சீன வெளியுறவு அமைச்சின் அதிகாரியான திரு யு ஜுன் நேற்று தெரிவித்தார். எனினும், அதற்கான காலகட்ட குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

