ஆர்சனலைப் பந்தாடிய மேன்சிட்டி; கார்டியோலாவின் படை பெருமிதம்
லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் ஆர்சனலை 4-1 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி நேற்று முன்தினம் பந்தாடியது. இதன்மூலம் லீக் பட்டியலில் முன்னிலை வகிக்கும் ஆர்சனலுக்கும் இரண்டாவது நிலையில் உள்ள மான்செஸ்டர் சிட்டிக்கும் இடையே இருக்கும் இடைவெளி குறைந்துள்ளது.
ஆர்சனலுக்கு 75 புள்ளிகள் உள்ளன. சிட்டிக்கு அதைவிட இரண்டு புள்ளிகள் மட்டுமே குறைவாக உள்ளன. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் சிட்டியின் கெவின் டி பிராய்ன ஆட்டத்தின் 7வது, 54வது நிமிடங்களில் கோல் போட்டார்.
இடைவேளைக்கு சில வினாடிகள் மட்டுமே இருந்தபோது ஜான் ஸ்டோன்ஸ் சிட்டியின் இரண்டாவது கோலைப் போட்டார்.
86வது நிமிடத்தில் ஹோல்டிங் போட்ட கோல் ஆர்சனலுக்கு ஆறுதல் கோலாக அமைந்தது.
ஆட்டம் முடிய சில வினாடிகள் எஞ்சியிருந்தபோது சிட்டியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் தமது குழுவின் நான்காவது கோலைப் போட்டார்.
இனி ஆர்சனலை முறியடித்து லீக் பட்டத்தைக் கைப்பற்ற முடியும் என நம்பிக்கை தமது ஆட்டக்காரர்களுக்கு ஏற்பட்டிருப்பதாக சிட்டியின் நிர்வாகி பெப் கார்டியோலா தெரிவித்தார். எஞ்சியுள்ள ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி புள்ளிகளைக் குவித்தால் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அவர் கூறினார்.
ஆபத்தான நிலையிலிருந்து வெளியேறிய ஃபாரஸ்ட்
நாட்டிங்ஹம்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டியை கடைசி மூன்று நிலைகளில் (18வது, 19வது, 20வது நிலை) முடித்துக்கொள்ளும் குழுக்கள் அடுத்த பருவத்தில் இரண்டாம் நிலை லீக் போட்டிக்குத் தள்ளப்படுவர்.
இந்நிலையில், பிரைட்டனுக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட் 3-1 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அது லீக் பட்டியலில் 17வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதனால் இரண்டாவது நிலை லீக் போட்டிக்குத் தள்ளப்படும் அபாயத்தை அக்குழு தற்போதைக்குத் தவிர்த்துள்ளது.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டியில் ஷெஃபீல்டு யுனைடெட்
லண்டன்: வெஸ்ட் பிராம்விச் அல்பியன் குழுவை நேற்று முன்தினம் 2-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிக்கு ஷெஃபீல்டு யுனைடெட் தகுதி பெற்றுள்ளது. அடுத்த பருவத்தில் ஷெஃபீல்டு யுனைடெட் பிரிமியர் லீக் போட்டியில் களமிறங்கும்.
இரண்டாவது நிலை லீக்கில் ஷெஃபீல்டு யுனைடெட் இரண்டாவது நிலையைப் பிடித்து பிரிமியர் லீக்கிற்குத் தகுதி பெற்றது.
இரண்டாவது நிலை லீக்கில் முதலிடம் பிடித்து பர்ன்லி ஏற்கெனவே பிரிமியர் லீக்கிற்குத் தகுதி பெற்றுவிட்டது.
ரசிகர்களின் கோபம் நியாயமானது; ஃபிராங்க் லெம்பார்ட் குமுறல்
லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் செல்சி தொடர்ந்து ஐந்தாவது முறையாகத் தோல்வியைத் தழுவியது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் பிரென்ட்ஃபர்ட் குழுவிடம் அது 2-0 எனும் கோல் கணக்கில் சொந்த விளையாட்டரங்கமான ஸ்டான்ஃபர்ட் பிரிட்ஜில் தோற்றது.
இதனால் பொறுமை இழந்து, சினங்கொண்டு செல்சி ஆட்டக்காரர்களுக்கு எதிராக ரசிகர்கள் முழக்கமிட்டனர். ரசிகர்களின் கோபம் நியாயமானது என்று செல்சியின் இடைக்கால நிர்வாகி ஃபிராங்க் லெம்பார்ட் தெரிவித்துள்ளார்.

