கியவ்: உக்ரேன் தலைநகர் கியவ் உட்பட பல நகரங்களில் ரஷ்யா தாக்குதல்களை நடத்தியுள்ளது. நேற்று நடந்த தாக்குதல்களில் குறைந்தது 17 பேர் மாண்டதாக சில தகவல்கள் தெரிவித்துள்ளன.
உமன் நகரில் குடியிருப்புக் கட்டடம் ஒன்றின்மீது ஓர் ஏவுகணை விழுந்தது. அதில் குறைந்தது மூவர் மாண்டனர், எட்டு பேர் காயமுற்றனர் என்று அப்பகுதிக்கான ராணுவ நிர்வாகத் தலைவர் மேஜர்-ஜெனரல் இஹோர் டாபுரெட்ஸ் முன்னதாகக் கூறியிருந்தார்.
மத்திய உக்ரேனில் உள்ள டினிப்ரோ நகரில் ஓர் ஏவுகணை வீடு ஒன்றைத் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஓர் இளம் பெண்ணும் ஒரு பிள்ளையும் மாண்டதாக அந்நகர மேயர் போரிஸ் ஃபிலாட்டோவ் டெலிகிராம் செயலியின் வாயிலாகத் தெரிவித்திருந்தார். அந்தத் தாக்குதலில் மூவர் காயமடைந்தனர்.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களில் காணப்படாத மோசமான ஆகாயப் படைத் தாக்குதல்களை ரஷ்யா நடத்தியிருக்கிறது. புதிய ஆயுதங்களைக் கொண்டு உக்ரேன் ரஷ்யாவுக்கு எதிராக பதில் தாக்குதல்களை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேற்கத்திய நாடுகள் வழங்கிய டாங்கிகளும் உக்ரேனின் பதில் தாக்குதல்களில் பயன்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஷ்யா ஆக்ரமித்துள்ள பகுதிகளை மீட்டெடுக்க நிலத்தில் பெரிய அளவிலான பதில் தாக்குதலை நடத்தத் தாங்கள் கிட்டத்தட்ட தயார்நிலையில் இருப்பதாக கியவ் கூறியுள்ளது.

