செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
8587eb95-eaa7-48ca-8013-2cc2b3ab2c6f
-

கவனத்தைச் சிதறவிட்ட யுனைடெட், சாதகமாக்கிக்கொண்ட ஸ்பர்ஸ்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் பல வாரங்களுக்குப் பிறகு தனது மீள்திறனை வெளிப்படுத்தியுள்ளது டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர். மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் பின்னால் இருந்தபோதும் மீண்டுவந்து சமநிலை கண்டது ஸ்பர்ஸ்.

அண்மையில் யூயேஃபா யுரோப்பா லீக் போட்டியிலும் செவியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு கோல் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்துவிட்டு வெற்றிகாணத் தவறியது யுனைடெட். அக்குழு அடிக்கடி கவனத்தை சிதறவிடும் அறிகுறிகள் தென்படுகின்றன.

இதற்கிடையே, கடந்த இரண்டு இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டங்களில் மொத்தம் 10 கோல்களைப் போட்டு அசத்தியுள்ளது நியூகாசல் யுனைடெட். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று டோட்டன்ஹம் ஹாட்ஸ்பரை 6-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்திய நியூகாசல் நேற்று முன்தினம் பின்னிரவு நடைபெற்ற ஆட்டத்தில் எவர்ட்டனை 4-1 எனும் கோல் கணக்கில் வென்றது.

மேலும் ஒரு சாதனை படைத்த சாந்தி பெரேரா

சிங்கப்பூர்: சிங்கப்பூர் திடல்தடப் போட்டிகளின் பெண்கள் 100 மீட்டர் பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார் சிங்கப்பூரின் சாந்தி பெரேரா (படம்). அவர் எடுத்துக்கொண்ட 11.43 விநாடிகள் இப்போட்டிகளுக்கான ஒரு புதிய சாதனை.

அதோடு, 100 மீட்டர் பந்தயத்தை சாந்தி இதற்கு முன்பு இவ்வளவு வேகத்தில் முடித்ததித்லை.

ஆண்கள் 100 மீட்டர் பந்தயத்தில் சிங்கப்பூரின் மார்க் லூயிஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் எடுத்துக்கொண்ட நேரம் 10.44 விநாடிகள்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விருதை தட்டிச் சென்ற யிப் பின் சியு

சிங்கப்பூர்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் வழங்கும் ஆகச் சிறந்த விளையாட்டாளர் விருதை வென்றுள்ளார், சிங்கப்பூரின் சிறப்புத் தேவையுடைய நீச்சல் வீராங்கனை யிப் பின் சியு.

தென்கிழக்காசிய வட்டாரத்துக்கான சிறப்புத் தேவையுடையோர் விளையாட்டுகளில் எஸ்2 50 மீட்டர் மல்லாந்து நீச்சல் பிரிவில் இருமுறை உலகச் சாதனையை முறியடித்தார் யிப். பின்னர் அப்பிரிவில் தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றிய இவர் சென்ற ஆண்டுக்கான 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அத்தலிட் ஆஃப் தி இயர்' விருதை வென்றுள்ளார்.