கிரைமியா: ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரைமியாவில் உள்ள செவஸ்டபோல் பகுதியில் ஆளில்லா வானூர்தியின் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து எண்ணெய்க் கிடங்கு ஒன்று கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
இது உக்ரேனியத் தாக்குதலாக இருக்கலாம் என நம்புவதாக செவஸ்டபோல் பகுதியின் ரஷ்ய ஆளுநரான மிக்கெல் சொன்னார்.
உயிரிழப்பு எதுவும் இல்லை என்ற அவர், கிடங்கில் அதிக அளவு எண்ணெய் இருப்பதால் தீயைக் கட்டுப்படுத்த அதிக நேரம் ஆகக்கூடும் என்றும் சொன்னார். இத்தாக்குதலுக்கு உக்ரேனிய அதிகாரிகள் நேரடியாக பொறுப்பேற்கவில்லை என்றபோதும் ரஷ்யாவின் மூர்க்கமான தாக்குதலுக்குப் பதிலடி தருவோம் என்றனர்.
நேற்று முன்தினம் உக்ரேனிய குடியிருப்புப் பகுதிகளில் ரஷ்ய படையினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி, தம் நாட்டின் வான்வழிப் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான ஆயுதங்களை வழங்குமாறு நட்பு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், ரஷ்யப் படையினரால் கடத்தப்பட்டடுள்ள உக்ரேனியப் பிள்ளைகளை மீட்பதற்கு உதவுமாறு சீன அதிபர் ஸி ஜின்பிங்கைக் கேட்டுக்கொண்டதாகவும் அவர் சொன்னார்.
"உக்ரேனிய பிள்ளைகளைக் கடத்திய ரஷ்யாவிற்கு அனைவரும் ஒன்று சேர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
"ஐநாவும் மேலும் பலரும் எடுக்கும் முயற்சிகளால் எந்தப் பயனும் இல்லை. எனவே, சீன அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்," என்று ஸெலன்ஸ்கி சொன்னார்.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு முதன்முறையாக சீன அதிபரும் உக்ரேனிய அதிபரும் கடந்த புதன்கிழமை தொலைபேசிவழி பேசினர். உக்ரேன்-ரஷ்யா பிரச்சினையில் நடுநிலையைப் பின்பற்றுவதாகச் சீனா கூறி வருகிறது. சீன அதிபர் சென்ற மார்ச் மாதம் ரஷ்ய அதிபரை நேரில் சந்தித்துப் பேசினார்.