ஹோ சி மின்: போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 65 பேரை வியட்னாமிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்கள் கிட்டத்தட்ட 50 கிலோ போதைப்பொருளை வியட்னாமிற்குள் கடத்த முயன்றனர்.
பற்பசைப் பிதுக்குக் குழாய்களில் வைத்து அவர்கள் போதைப்பொருளைக் கடத்த முயன்றதாக பிபிசி செய்தி கூறுகிறது.
சென்ற மார்ச் மாதம் வியட்னாம் ஏர்லைன்சின் விமானச் சிப்பந்திகள் நால்வர் இதேபோன்ற கடத்தலுக்காக கைது செய்யப்பட்டிருந்தனர். அந்த விமானம் பாரிசில் இருந்து வியட்னாம் சென்றது.
கிட்டத்தட்ட 60 கிலோ எடையுள்ள பற்பசையை எடுத்துச் செல்வதற்காக பணிக்கப்பட்டோம் ஆனால், அதில் போதைப்பொருள் இருப்பது தங்களுக்குத் தெரியாது என்றும் விமானச் சிப்பந்திகள் கூறினர்.
இந்த வாரமும் அதே போன்ற ஆறு கடத்தல் சம்பவங்கள் முறியடிக்கப்பட்டதாக வியட்னாம் காவல்துறையினர் கூறினர்.
அதைத் தொடர்ந்து, 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானச் சிப்பந்திகள் மூலம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட அதே கும்பல்தான் இந்த 65 பேரையும் அதே கடத்தலுக்குப் பயன்படுத்தியிருக்கும் என்று காவல்துறை நம்புகிறது.
பிரான்சில் வாழும் வியட்னாமிய மாணவர்கள், வேலைக்குச் சென்றவர்களைக் குறிவைத்து அக்கும்பல் போதைப்பொருள் கடத்துவதாகவும் கூறப்படுகி
றது.
வியட்னாமில் 600 கிராமிற்கு அதிகமான போதைப்பொருள் வைத்திருந்ததாகவோ கடத்துவதற்கு முற்பட்டதாகவோ நிரூபிக்கப்பட்டல், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

