தகாசாகி: 'ஜி7' எனும் ஏழு முன்னேறிய நாடுகளின் அமைப்பு, ஆபத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்கை நுண்ணறி வுக்கான ஒழுங்குமுறையை வகுக்க இணக்கம் தெரிவித்து உள்ளன.
'சேட்ஜீபிடி' போன்ற செயற்கை நுண்ணறிவு தளங்கள் அதி கரித்து வருவதால், இவற்றின் ஆதிக்கத்தை வரம்புக்குள் கொண்டுவர ஐரோப்பிய நாடாளு மன்ற உறுப்பினர்கள் புதிய விதிமுறைகளை புகுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
ஆனால் விதிமுறைகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மேம்படுவதற்கு முட்டுக்கட்டையாக இருந்துவிடக் கூடாது. அதனை சுதந்திரமாக, வெளிப்படையாக அனுமதிக்க வேண்டும் என்று கூட்டு அறிக்கையில் ஜி7 அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
ஜப்பானில் நடந்த இரண்டு நாள் ஜி7 அமைச்சர்கள் கூட்டம் நேற்று நிறைவடைந்தது. இதை யடுத்து கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.
செயற்கை நுண்ணறிவுக்கான பொதுஇலக்கை அடையும் கொள்கைகள் ஜி7 உறுப்பு நாடுகளிடையே வேறுபடலாம் என்று அறிக்கை தெரிவித்தது.
ஜி7 நாடுகளுக்கு இடையிலான இந்த இணக்கம், செயற்கை நுண்ணறிவை முக்கிய நாடுகள் எவ்வாறு நிர்வகிக்கின்றன என்பதற்கு சான்றாகும்.
"இந்த ஜி7 கூட்டத்தின் முடிவு, இந்த விவகாரத்தில் நாம் தனியாக இல்லை என்பதைக் காட்டுகிறது." என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய ஐரோப்பிய ஆணையத்தின் நிர்வாக துணைத் தலைவர் மார்கிரேத் வெஸ்டேகெர் கூறினார்.
"செயற்கை நுண்ணறிவு பற்றி விவாதிக்க ஜி7 கூட்டத்தை எதிர்காலத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளோம். அப்போது ஆளுமை, பதிப்புரிமை உள்ளிட்ட அறிவுசார் சொத்துரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது, வெளிப்படைத் தன்மையை ஊக்குவித்தல் மற்றும் அந்நிய சக்திகளின் தகவல்களை கையாளுதல் உள்ளிட்ட தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறும்," என்று அமைச்சர்களின் அறிக்கை குறிப்பிட்டது.
ஜி7 உறுப்பு நாடுகளில் ஒன்றான இத்தாலி, கடந்த மார்ச் மாதம் சாட்ஜிபிடி-யை இணையத்திலிருந்து அகற்றியது. தனிப்பட்ட தரவு விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படுவதைக் குறித்து விசாரிப்பதாகவும் இத்தாலி அராசங்கம் அதற்கு விளக்கமளித்தது. கடந்த வெள்ளிக் கிழமை சாட்ஜிபிடிக்கான தடையை இத்தாலி அகற்றியது.

