ஜோகூர் பாரு: மலேசியாவில் பல்வேறு குடிநுழைவு, சோதனைச் சாவடிகளில் பணிபுரியும் ஊழியர்களின் நலனை மேம்படுத்தப்போவதாக அந்நாட்டு அரசாங்கம் உறுதியளித்துள்ளது. சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைக்கும் இரண்டு நிலவழிக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள், அவற்றில் பயணிகளைத் தனிமைப்படுத்துவதற்கான நிலையங்கள் ஆகியவற்றில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு இது பொருந்தும். நிலவழிச் சோதனைச் சாவடிகளில் சேவைத் தரத்தை உயர்த்துவது இலக்கு.
தற்போது நடப்பில் இருக்கும் வழிமுறைகளை மேம்படுத்த மாநில, மத்திய அரசாங்கங்கள் கடமைப்பட்டுள்ளதாக ஜோகூர் முதலமைச்சர் ஒன் ஹஃபிஸ் காஸி கூறியுள்ளார். இரு நிலவழிக் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளிலும் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்குடன் முயற்சிகள் எடுக்கப்படுவதை அவர் குறிப்பிட்டார்.
"சுல்தான் இஸ்கந்தர் கட்டடம் (பிஎஸ்ஐ), சுல்தான் அபு பக்கர் நிலையம் (கேஎஸ்ஏபி) ஆகியவற்றின் ஊழியர்கள் உச்ச நேரத்தில் வேலை பார்க்கும் நேரத்தை மறுபரிசீலனை செய்ய அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். அதன் மூலம் குடிநுழைவு அதிகாரிகள் பற்றாக்குறைக்குத் தீர்வு கிடைக்கும்.
"அதோடு, அதிக நேரம் வேலை செய்யும்போது வழங்கப்படும் கூடுதல் சம்பளம், ஒட்டுமொத்த ஊழியர் நலனை மேம்படுத்தும் நோக்குடன் ஓய்வெடுப்பதற்கான இடங்கள், குளிர்சாதன வசதி, சாவடிகளில் அமர இருக்கைகள் போன்றவற்றை வழங்குவது குறித்தும் அதிகாரிகள் ஆலோசிப்பர்," என்று திரு ஒன் ஹாஃபிஸ் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
பிஎஸ்ஐ கட்டடத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவது, கேஎஸ்ஏபி நிலையத்தில் மோட்டார் சைக்கிள் பாதையின்மேல் கூரை கட்டுவது போன்ற பரிந்துரைகளைப் பற்றி இதுவரை பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

