கார்ட்டும்: சூடானின் ராணுவத்துக்கும் அந்நாட்டின் துணை ராணுவப் படைகளுக்கும் இடையே நிலவிவரும் உள்நாட்டுப் போர் மோசமடைந்துள்ளது.
நாளுக்கு நாள் தீவிரமடையும் உள்நாட்டுப் போரில் உயிர்ச் சேதம் மளமளவென அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. தலைநகர் கார்ட்டுமை துணை ராணுவப் படையினர் சுற்றிவளைத்துத் தாக்குதல் நடத்துகின்றனர்.
தலைநகரில் உள்ள அதிபர் மாளிகை, ராணுவத் தலைமையகம் போன்ற முக்கியமான இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து துணை ராணுவப் படைகளை விரட்டியடிக்கும் பணியில் சூடான் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
சில நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் வெறும் பெயர் அளவில்தான் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சண்டை தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாகிவிட்டன.
இருப்பினும், பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இருதரப்பினருக்கும் இல்லை என்று கூறப்படுகிறது.
கார்ட்டுமுக்கு அருகில் உள்ள அம்டுர்மான், பாரி ஆகிய இரண்டு நகரங்களிலும் குண்டு மழை பொழியப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

