கியவ்: ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மீது ஆளில்லா வானூர்தி மூலம் உக்ரேன் தாக்குதல் நடத்தியதாக மாஸ்கோ கூறுவதை உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி மறுத்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைக் கொலை செய்யும் நோக்கத்துடன் கியவ் அவ்வாறு தாக்குதல் நடத்தியதாக மாஸ்கோ சாடியதையும் அவர் நிராகரித்தார்.
"புட்டினையோ மாஸ்கோவையோ தாக்குவது எங்கள் நோக்கமல்ல. உக்ரேனிய நகரங்களையும் கிராமங்களையும் தற்காக்கவே நாங்கள் போரிடுகிறோம்," என்று அவர் கூறினார்.
ஃபின்லாந்தின் ஹெல்சிங்கி நகரில் ஃபின்லாந்து, சுவீடன், நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகியவற்றின் தலைவர்களைச் சந்தித்துப் பேசியபோது திரு ஸெலென்ஸ்கி அவ்வாறு கூறினார். 'த ஹேக்' நகரில் அமைந்திருக்கும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலக நீதிமன்றத்தில் உக்ரேனிய அதிபர் உரையாற்றுவார் என்ற தகவல் வெளியாகியுள்ள வேளையில், உக்ரேனின் சில இடங்களில் ரஷ்யா தாக்குதல்களை மேற்கொண்டிருக்கிறது. கிரெம்ளின் தாக்குதலுக்குப் பதிலடியாக அவை கருதப்படுகின்றன. உக்ரேனில் ரஷ்யா புரிந்த போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்திவரும் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திற்கும் திரு ஸெலென்ஸ்கி செல்லத் திட்டமிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து நெதர்லாந்து சென்று அந்நாட்டுப் பிரதமர் மார்க் ரட்டவை அவர் சந்திப்பார்.
கூடுதல் ராணுவ உதவி குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடுவர் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மாஸ்கோ உக்ரேனிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் அந்தத் தாக்குதல்களில் 21 பேர் மாண்டனர். நேற்று அதிகாலை உக்ரேனின் பல பகுதிகளில் ஆகாயத் தாக்குதல் குறித்த எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. கியவ், ஒடிசா போன்ற நகரங்களில் பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
கிரெம்ளின் மீதான தாக்குதல் ரஷ்யா திட்டமிட்டு நடத்திய நாடகம் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

