கார்ட்டூம்: சூடானில் மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் சவூதி அரேபியாவின் ஜெடா நகரில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டன. வாஷிங்டனும் ரியாத்தும் இத்தகவலைத் தெரிவித்தன.
மோதலை முடிவுக்குக் கொண்டுவருமாறு சமரசப் பேச்சாளர்கள் கேட்டுக்கொண்டுவரும் நிலையில் இத்தகவல் வெளிவந்தது.
சூடான் ராணுவத்துக்கும் ஆர்எஸ்எஃப் எனப்படும் அந்நாட்டின் துணை ராணுவப் படையினருக்கும் இடையே மோதல் தொடர்கிறது. அதனால் நூற்றுக்கணக்கானோர் மாண்டுவிட்டனர், பல்லாயிரக்கணக்கானோர் மற்ற நாடுகளுக்கு வெளியேறியுள்ளனர்.
இது, பேச்சுவார்த்தையின் தொடக்கக் கட்டமாகக் கூறப்படுகிறது. இதை வரவேற்பதாக சவூதி அரேபியாவும் அமெரிக்காவும் தெரிவித்துள்ளன. பேச்சுவார்த்தையின் மூலம் சண்டையை நிறுத்தித் தீர்வுகாணுமாறு இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டன.
சென்ற மாதம் நடுப்பகுதியில் மோதல் தொடங்கியது. அப்போதிருந்து சண்டையைத் தற்காலிகமாக நிறுத்தப் பலவேளைகளில் ஒப்புக்கொள்ளப்பட்டது.
எனினும், அதையும் மீறி பூசல் தொடர்ந்திருக்கிறது.
சண்டையை நிறுத்த அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் எடுக்கும் முயற்சி இதுவரை மேற்கொள்ளப்பட்டவற்றில் ஆக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
சூடான், முன்னதாகப் பல பூசல்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனினும், இம்முறைதான் தலைநகர் கார்ட்டூம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

