வியட்னாமை வாட்டும் வெயில்
ஹனோய்: வியட்னாமில் அண்மைய நாள்களில் வெயில் வாட்டும் நிலையில், தான் ஹோவா வட்டாரத்தில் நேற்று முன்தினம் வெப்பநிலை 44.1 டிகிரி செல்சியசாகப் பதிவானது. 2019ஆம் ஆண்டு பதிவான ஆக அதிக வெப்பநிலையைக் காட்டிலும் அது அதிகம் என்று வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் பதிவான ஆக அதிக வெப்பநிலை, பிற்பகல் நேரத்தில் உள்ளரங்கில் கணக்கிடப்பட்டது. இதற்கு முன்னர் 2019 ஏப்ரல் 20ஆம் தேதி ஹா டின் வட்டாரத்தில் 44.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. பருவநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் ஆகியவற்றின் அடிப்படையில் புதிய உச்ச வெப்பநிலை கவலையளிப்பதாக ஹனோயில் உள்ள பருவநிலை வல்லுநர்கள் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினர்.
தாய்லாந்துத் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்கத் திரண்ட வாக்காளர்கள்
பேங்காக்: தாய்லாந்தில் இம்மாதம் 14ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் முன்கூட்டியே வாக்களிப்பதற்கு நேற்றுப் பல்லாயிரக் கணக்கானோர் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர். வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ள மொத்தம் 52 மில்லியன் பேரில் இரண்டு மில்லியனுக்கு மேற்பட்டோர் முன்கூட்டியே வாக்களிக்கப் பதிந்துகொண்டதாக தாய்லாந்துத் தேர்தல் ஆணையம் கூறியது. தலைநகர் பேங்காக்கில் வசிப்போர் நேற்று ஒரு நாள் மட்டும் முன்கூட்டியே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு 800,000 பேர் பதிந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. நேற்று வாக்களித்த பலரும் நிர்வாகத்தில் மாற்றத்தையும் மேம்பாட்டையும் விரும்பி வாக்களித்ததாகக் கூறியதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. தாய்லாந்தில் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக முன்னாள் ராணுவத் தலைவர் பிரயுத் சானோச்சா பிரதமராகப் பணியாற்றி வந்துள்ளார். 69 வயதாகும் அவர் 2004ல் ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றினார். கருத்துக் கணிப்பில் எதிர்த்தரப்பு பியூ தாய் கட்சி முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது.

