பேங்காக்: மிதமிஞ்சிய வெப்பத்தால் ஆசிய வட்டாரம் கொதிக்கும் நிலையில் இந்த 2023ஆம் ஆண்டு உலகின் உச்ச வெப்ப ஆண்டாக இருக்கக்கூடும் என்று பருவநிலை விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
கோடை வெப்பம் கடுமையாகத் தாக்கும் முன்னர் இப்போதே அதற்கான அபாய அறிகுறிகள் தென்படுகின்றன. ஆசிய கண்டத்தின் தென் பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் தாக்கி வருவதாக வானிலை ஆய்வகக் குறியீடுகள் உணர்த்து கின்றன.
கடந்த வார இறுதியில் இதுவரை காணாத வெப்பத்தை வியட்னாம் சந்தித்தது. சனிக்கிழமை பிற்பகலில் 44.2 டிகிரி செல்சியஸ் வெயில் அங்கு கொளுத்தியது.
தாய்லாந்தில் கடந்த வாரம் வடக்கு மற்றும் மத்திய வட்டாரங்களில் 40 டிகிரி செல்சியசுக்கும் மேல் வெப்பம் நீடித்தது. அதனைத் தொடர்ந்து அங்கு மின்சாரத்துக்கான தேவை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமானது.
மலேசியாவையும் வெப்பம் விட்டுவைக்கவில்லை. அங்கு சில பகுதிகளில் 40 விழுக்காட்டுக்கும் குறைவான மழை பெய்வதால் செம்பனை எண்ணெய் உற்பத்தியில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.
மற்றோர் ஆசிய நாடான லாவோசும் உச்சக்கட்ட வெப்பத்தை கடந்த வாரம் பதிவு செய்தது. அதேபோல, வெப்பக் குறியீடு அபாய கட்டத்தை எட்டியதால் பிலிப்பீன்ஸ் பள்ளிக்கூடங்கள் தங்களது வகுப்பு நேரத்தைக் குறைத்தன.
தென் ஆசிய நாடுகளான சீனா, இந்தியா மற்றும் பங்ளாதேஷிலும் கடந்த வாரம் கொதிக்கும் வெப்பமும் கொளுத்தும் வெயிலும் காணப்பட்டன.
கொவிட்-19 சிரமங்களில் இருந்து நாடுகள் மீண்டு வரும் நிலையில் அளவுக்கு அதிகமான வெப்பம் மின் உற்பத்தியையும் வேளாண்மையையும் பெரிய அளவில் பாதிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.