பேங்காக்: தாய்லாந்தில் முன்கூட்டி நடத்தப்பட்ட வாக்களிப்பில் குளறுபடிகள் நிகழ்ந்திருப்பதாக கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
அரசு சாரா அமைப்புகளின் ஒட்டுமொத்த கூட்டு அமைப்பான 'தேர்தல் கண்காணிப்புக்கான மக்கள் கட்டமைப்பு' எச்சரிக்கை ஒலி எழுப்பியதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் சர்ச்சையில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதற்கட்ட வாக்களிப்பின்போது வாக்காளர்களின் பெயர் விடுபட்டு இருந்ததாகவும் வாக்களிக்க வேண்டியவர்களின் பெயரில் மற்றவர்கள் வாக்களித்ததாகவும் தபால் வாக்குச்சீட்டுகளில் பிழைகள் இருப்பதாகவும் கிட்டத்தட்ட 300 புகார்கள் தனக்கு வந்திருப்பதாக அந்த அமைப்பு நேற்று கூறியது.
மேலும், வாக்களிப்பு நிலையங்களில் வேட்பாளர்களின் பெயர்கள் முழு அளவில் இல்லை என்று புகார்கள் வந்திருப்பதாகவும் அது தெரிவித்தது. வரும் ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்தில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. மக்கள் எதிர்த்தரப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக, 2014ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றிய ராணுவத்தின் எட்டு ஆண்டு கால நிர்வாகம் ஒரு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்களிக்கத் தகுதி பெற்றோரில் சுமார் 2 மில்லியன் பேர் நேற்று முன்தினம் முதற்கட்ட வாக்களிப்புக்குத் தகுதி பெற்று இருந்தனர்.
வாக்களிப்பின்போது ஏற்பட்ட தவறுகள் குறித்து தனக்கு 92 புகார்கள் வந்திருப்பதாக தாய்லாந்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வரும் 14ஆம் தேதி நடைபெற இருக்கும் வாக்களிப்பின்போது இந்தத் தவறுகள் மீண்டும் நிகழாது என்று ஆணையம் உறுதி அளித்துள்ளது.