பெண்கள் 400 மீட்டர் ஓட்டம்: 24 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வென்ற மலேசியா

பெண்கள் 400 மீட்டர் ஓட்டம்: 24 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வென்ற மலேசியா

2 mins read
f31ad194-6681-4ddc-be19-fb5436b6dcdf
படம்: ஏஎஃப்பி -

தென்கிழக்காசிய விளையாட்டுகளின் திடல்தடப் போட்டிகளில் மலேசியாவுக்குப் பெருமை தேடித் தந்துள்ளார் ஷெரீன் சேம்சன் வல்லபாய். பெண்கள் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இவர் தங்கம் வென்றுள்ளார்.

ஷெரீன் எடுத்துக்கொண்ட நேரம் 52.53 விநாடிகள். தென்கிழக்காசிய விளையாட்டுகளின் பெண்கள் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மலேசிய வீராங்கனை ஒருவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளது இதுவே முதல்முறை.

1999ஆம் ஆண்டு புருணையில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுகளில் மலேசியாவின் என்.மணிமேகலை இப்போட்டியில் தங்கம் வென்றார்.

இவ்வாண்டு விளையாட்டுகளின் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார் வியட்னாமின் கையன் தி ஹுயன். வெண்கலப் பதக்கமும் அந்நாட்டின் கையன் தி ஹாங்கிற்குச் சென்றது.

ஆண்கள் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் மலேசியாவுக்குக் காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. தென்கிழக்காசிய விளையாட்டுகளில் முதன்முறையாகப் பங்கேற்கும் அந்நாட்டின் உமர் ஒஸ்மான் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். மேலும், இப்பிரிவுக்கான மலேசிய தேசிய சாதனையையும் இவர் முறியடித்தார்.

20 வயது உமர் எடுத்துக்கொண்ட நேரம் 46.34 வினாடிகள். இதுவரை இப்பிரிவில் மலேசியாவின் தேசிய சாதனை நேரம் 46.41 வினாடிகளாக இருந்தது.

ஆண்கள் 5,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சிங்கப்பூரின் சோ ருய் யோங் நான்காவதாக முடித்தார்.

பந்தயம் தொடங்கியபோது முதலில் இருந்தார் 31 வயது சோ. எனினும், போகப்போக அவரால் சக போட்டியாளர்கள் சிலருக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

அவர் எடுத்துக்கொண்ட நேரம் 14 நிமிடங்கள் 48.43 வினாடிகள். ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பங்கேற்கிறார் சோ.

பதக்கத்துடன் மீண்டும் களமிறங்கவில்லை என்றாலும் முடிந்தவரை சிறப்பாகச் செய்ததை எண்ணி பெருமைப்படுவதாகச் சொன்னார் சோ.

இப்பிரிவில் போட்டியிட்ட சக சிங்கப்பூரரான ஜீவனீஷ் செளந்தரராஜா 15வது இடத்தில் முடித்தார்.

தாய்லாந்தின் கியரன் டீனிவாட்டே 14 நிமிடங்கள் 34.77 வினாடிகளில் பந்தயத்தை முடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். வெள்ளிப் பதக்கத்தை வென்றார் பிலிப்பீன்சின் சொனி வாக்டோஸ். வெண்கலத்தை வென்றவர் இந்தோனீசியாவின் ரொபி சையான்டுரி.

குறிப்புச் சொற்கள்