பெய்ஜிங்: இவ்வாண்டு கோடை காலத்திலும் கடுமையான வெப்பம் தாக்கக்கூடும். இதனால் மற்றொரு சுற்று மின்சாரப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது என்று சீனா எச்சரித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டில் கடுமையான வெப்பத்தால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டது. கார்கள் முதல் சூரியத் தகடு வரை உற்பத்தி பாதிக்கப்பட்டு உலகளாவிய விநியோகச் சங்கிலி துண்டிக்கப் பட்டது.
இந்த நிலையில் இவ்வாண்டு கோடை காலத்தில் மின் விநியோக நெருக்கடி ஏற்படும் என்று மாநில எரிபொருள் ஆய்வு அமைப்பை சுட்டிக்காட்டி அதிகாரபூர்வ மாநிலத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்சாரத் தேவை அதிகமாக உள்ள காலகட்டத்தில் மத்திய, கிழக்கு, தென்-மேற்கு வட்டாரங்கள் மின்சாரப் பற்றாக் குறையைச் சந்திக்கக் கூடும் என்று அமைப்பு கூறியது.
பூமியின் வடக்குக் கோளப் பகுதியில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே ஆசியாவின் பல பகுதிகளைக் கடுமையான வெப்பம் வாட்டி வருகிறது.
வியட்னாமில் 44.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. பிலிப்பீன்சில் பள்ளிகள் முன்கூட்டியே மூடப்பட்டன.
இந்தியாவும் விழிப்பு நிலையில் இருந்து வருகிறது.
பருவநிலை மாற்றத்தால் உச்சக்கட்ட வானிலை மாற்றங்கள் அடிக்கடி நிகழ்வதாக உலக வானிலை அமைப்பு களின் அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
சீனாவின் பல பகுதிகளில் வெப்பம் அதிகரித்து வருகிறது. பல வட்டாரங்களில் வெப்ப அலை வீசும் என்றும் சீன வானிலை நிர்வாகம் கூறியுள்ளது.