கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம், 2025ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் சில்லறை வர்த்தகங்களுக்காகப் பயன் படுத்தப்படும் நெகிழிப் பைகளுக்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
அந்நாட்டின் இயற்கை வள, சுற்றுச் சூழல், பருவநிலை மாற்ற அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹமட் இதனைத் தெரிவித்தார்.
தற்போது கட்டம் கட்டமாக பேரங்காடியிலிருந்து குறிப்பிட்ட கடைகள் வரை நெகிழிப் பைகளின் பயன்பாட்டை குறைக்கும் 'நோ பிளாஸ்டிக் பேக்ஸ்' இயக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த இயக்கம் மற்ற வர்த்தகங் களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு 2025ஆம் ஆண்டுவாக்கில் நெகிழிப் பைகளின் பயன்பாடு முற்றிலும் அகற்றப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டில் வியாபாரிகள் தொடர்ந்து நெகிழிப் பைகளைப் பயன் படுத்தினால் அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படும். அதோடு மாற்றத்தைக் ஏற்படுத்துவதற்கான திட்டங்களும் மேற்கொள்ளப்படும்.
இது தொடர்பான தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என்று திரு நிக் நஸ்மி நிக் அஹமட் குறிப்பிட்டார்.
சிலாங்கூரின் பெட்டாலிங் ஜெயாவில் நேற்று நடைபெற்ற மறுசுழற்சி பை அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இந்த விவரங்களை வெளியிட்டார்.

