லாபுவான் பாஜோ: ஆசியான் முன்வைத்த அமைதி திட்டத்தை மியன்மார் ராணுவ அரசாங்கம் மதிக்காத நிலையில் அம்முயற்சி வெற்றி பெற வேண்டுமானால் ஆசியானிடையே ஒற்றுமை தேவை என்று இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோ வலி யுறுத்தியுள்ளார்.
அப்போதுதான் மியன்மாருக்கான அமைதி திட்டத்தில் முன்னேற்றத்தைக் காண முடியும் என்றார் அவர்.
இந்தோனீசியாவின் லாபுவான் பாஜோவில் இரண்டு நாள் ஆசியான் உச்சநிலை மாநாடு நடை பெற்றது. இதில் மியன்மாரில் நடக்கும் வன்முறைகளைப் பற்றியே அதிகம் பேசப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மியன்மாரில் தூதர்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் மீது மேற் கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ஆசியான் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் மாநாட்டின் இரண்டாவது மற்றும் கடைசி நாளான நேற்று தலைமையேற்றுப் பேசிய அதிபர் விடோடோ, மியன்மாரின் பங்கேற்புடன் ஆசியான் ஐந்து அம்ச அமைதித் திட்டத்தை அமலாக்க இந்தோனீசியா தொடர்ந்து முயற்சிகளை எடுக்கும் என்றார்.
கலந்துரையாடல், மனிதாபிமான உதவிகள், வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நெருக்குதல் போன்றவற்றின் மூலம் முயற்சி எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
"நேர்மையாகச் சொன்னால் ஐந்து அம்ச அமைதி திட்டத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனை முன்னெடுத்துச் செல்ல ஆசியானிடம் ஒற்றுமை அவசியம்," என்று இந்தோனீசிய அதிபர் குறிப்பிட்டார். 2021ஆம் ஆண்டில் மியன்மாரில் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஜன நாயக அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.
இதன் பிறகு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
ஏராளமானோர் இடம் மாறினர். ஆசியான் முன்வைத்த அமைதி திட்டம், மியன்மாரில் அனைத்துத் தரப்பினரும் வன் முறையைக் கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்துகிறது.

