2023ன் முதல் காலாண்டில் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.6% உயர்வு
கோலாலம்பூர்: இந்த ஆண்டின் முதல் காலாண்டுக்கான மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.6 விழுக்காடு வளர்ச்சி கண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் அது அதிகம்.
மொத்த உள் நாட்டு உற்பத்தி விகிதம் அதிகரித்ததற்கு தனியார் துறை செலவினங்கள் அதிகரித்தது முக்கியக் காரணம் என்று மலேசியாவின் மத்திய வங்கியான பேங்க் நெகாராவின் ஆளுநர் நூர் ஷம்சியா முகமது யூனுஸ் கூறினார்.
குடும்பங்களின் செலவினம் அதிகரித்தது, தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு நடவடிக்கைகள், ஊழியர் சந்தை மேம்பாடு, சுற்றுப்பயண நடவடிக்கைகள் அதிகரித்தது போன்றவற்றால் முதல் காலாண்டின் பொருளியல் வளர்ச்சி சாத்தியமானதாக அவர் குறிப்பிட்டார்.
"மலேசியா பொருளியல் மந்தநிலை அபாயத்தை எதிர்நோக்கவில்லை. நாட்டின் பொருளியல் கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு முன்பிருந்ததைவிட வளர்ச்சி கண்டுள்ளது," என்றார் திருவாட்டி நூர் ஷம்சியா. வேலையின்மை விகிதம் கிருமிப் பரவலுக்கு முன்பிருந்ததைக் காட்டிலும் மேம்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
முதலீட்டுச் சூழலை எடுத்துக்கொண்டால், ஈஸ்ட்கோஸ்ட் இணைப்பு ரயில்பாதை, போர்னியோ நெடுஞ்சாலை போன்ற பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் பெரிய தாமதம் ஏதுமில்லை என்றார் அவர். நாட்டின் ஏற்றுமதி மிதமான வளர்ச்சி கண்டதாக அவர் குறிப்பிட்டார்.

