பேங்காக்: தாய்லாந்தில் நாளை பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் வாக்களிப்பிற்குப் பிறகு தேர்ந்தெடுக்கும் அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு மீண்டும் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்பே இல்லை என்று தாய்லாந்து ராணுவத் தலைவர் கூறியிருக்கிறார்.
அரச தாய் ராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து இன்னும் ஐந்து மாதங்களில் அவர் ஓய்வுபெறவிருக்கிறார்.
"வருங்காலத்தில் நாட்டில் அரசியல் நிலைத்தன்மை நிலவும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அனைத்துக் கட்சிகளும் இதன் தொடர்பில் இணைந்து பணியாற்ற வேண்டும்," என்று அவர் கூறினார்.
ஜனநாயக ஆதரவு எதிர்க் கட்சிகள் உதவித்தொகை வழங்க உறுதியளித்துள்ளன. தாய்லாந்து அரசியலில் ராணுவ ஜெனரல்களின் ஆதிக்கத்தைக் குறைப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்கள் குறித்தும் அவை பரிந்துரைத்துள்ளன.
நாடாளுமன்றத்தில் உரிய பெரும்பான்மை கிடைத்தால் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய அவை உறுதியளித்துள்ளன.
முன்னாள் பிரதமர் தக்சின் ஷினாவட்டின் பியூ தாய் கட்சி, ஆட்சிக் கவிழ்ப்பைத் தடுக்கும் மசோதாவை நிறைவேற்றவும் உறுதி கூறியுள்ளது.
1932ஆம் ஆண்டு முதல் தாய்லாந்து ராணுவம் 12 முறை, அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றியதுண்டு.