கோலாலம்பூர்: ஊழல் குற்றங்கள் காரணமாக மலேசியாவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து விசாரணை நடத்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உட்பட நாட்டின் பல்வேறு அமலாக்கப் பிரிவுகளுக்கு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் உத்தரவிட்டுள்ளார்.
ஊழலில் ஈடுபடுவோர், ரகசியத் தகவல்களைக் கசியவிடுவோர் குறித்து விசாரணை நடத்தி அவர்களைக் கண்டுபிடிக்குமாறு மலேசியக் காவல்துறைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 26 ஆண்டுகளில் மலேசியா 4.5 டிரில்லியன் ரிங்கிட் இழந்துள்ளதாக இஎம்ஐஆர் ஆய்வில் தெரியவந்ததை அடுத்து இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பேங்க் நெகாரா மலேசியாவிடமும் மலேசிய உள்நாட்டு வருவாய் துறையிடமும் திரு அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
ஊழலுக்கு எதிராக திரு அன்வார் பலமுறை போர் முரசு கொட்டியுள்ளார்.
ஊழல் காரணமாக மலேசியாவுக்கு நினைத்துப் பார்க்க முடியாத, மாபெரும் இழப்பு ஏற்
பட்டுள்ளதாக அவர் கூறினார்.
"ஊழல் காரணமாக மலேசியாவுக்குத் எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று என்னால் இப்போதைக்குத் துல்லியமாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் அந்தத் தொகை பல பில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ளது என்று என்னால் கூற முடியும்.
"இந்த ஊழல்களுக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்க நான் எடுக்கும் நடவடிக்கைகளைத் தடுக்கவும் என்னைத் தாக்கவும் முயற்சி செய்கின்றனர், குறிப்பாக செல்வந்தர்கள் என்று திரு அன்வார் தெரிவித்தார்.