நெருங்கும் பயங்கர புயல்; வெளியேற்றும் பணிகள் தீவிரம்
டாக்கா: 'மோக்கா' புயல் நெருங்குவதால் பங்ளாதேஷின் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றும் பணிகளில் அந்நாட்டு அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது. புயலால் பாதிக்கப்படக்கூடிய கோக்ஸ் பசாரில் உள்ள அகதிகள் முகாம்களிலிருந்து ரொஹிங்கியா அகதிகளையும் பிற மக்களையும் பத்திரமாக வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பணம் கையாடியதாக சந்தேகம்; புத்த பிக்குகள் கைது
பேங்காக்: தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பௌத்த கோயிலுக்குச் சொந்தமான கிட்டத்தட்ட 300 மில்லியன் பாட் (S$11.89 மில்லியன்) தொகையைக் கையாடியதற்காக ஒன்பது பேரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைதானவர்களில் ஏழு பேர் புத்த பிக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று அந்தக் கோயிலில் திடீர் சோதனை நடத்தப்பட்டதில் பணம் கையாடப்பட்டது வெளிச்சத்துக்கு வந்ததாக அதிகாரிகள் கூறினர்.
அமெரிக்க அரசு ஊழியர்கள் தொடர்பான தரவுகள் கசிவு
வாஷிங்டன்: அமெரிக்காவின் தற்போதைய, முன்னாள் அரசு ஊழியர்கள் என ஏறத்தாழ 237,000 பேரின் தனிப்பட்ட விவரங்கள் வெளியே கசிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணச் செலவுகளுக்காக அரசு ஊழியர்களுக்கு சலுகை வழங்குவதை நிர்வகிக்கும் அமெரிக்க அரசு இணையக் கட்டமைப்பு ஊடுருவப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் தனிப்பட்ட விவரங்கள் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டனவா என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.
சொந்த பிள்ளைகளைக் கொன்ற பெண்; குற்றவாளி எனத் தீர்ப்பு
லாஸ் ஏஞ்சலிஸ்: தமது பிள்ளைகளுக்கு பேய் பிடித்துவிட்டது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடனும் சமயக் கோட்பாடுகளைக் கட்டிக்காக்க வேண்டும் என்ற சிந்தனையுடனும் பெண் ஒருவர் தமது இரண்டு பிள்ளைகளையும் கொன்றதாக அமெரிக்க நீதிமன்றத்தில் நிருபிக்கப்பட்டது.
இதையடுத்து, 49 வயது லோரி வாலோ டேபெல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கான தண்டனை இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
தமது கணவரின் முன்னாள் மனைவியையும் கொல்ல அவர் திட்டம் தீட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் டேபெலுக்கு எதிராக ஏறத்தாழ 60 பேர் சாட்சியம் அளித்தனர்.
ஜி-7: வளரும் நாடுகளுக்கான புதிய தடுப்பூசித் திட்டம்
தோக்கியோ: அடுத்த வாரம் நடைபெற இருக்கும் ஜி-7 நாட்டுத் தலைவர்களுக்கான உச்சநிலை மாநாட்டில் வளரும் நாடுகளுக்குத் தடுப்பூசிகளை விநியோகிப்பது தொடர்பான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகம் தெரிவித்துள்ளது.
ஜி-7 நாடுகள் மட்டுமின்றி, இந்தியா போன்ற ஜி-20 நாடுகளும் உலக சுகாதார நிறுவனம் போன்ற அனைத்துலக அமைப்புகளும் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள இருப்பதாக ஜப்பானிய அரசாங்கம் தெரிவித்திருப்பதாக ஜப்பானிய நாளிதழான யொமியூரி ஷிம்புன் தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சுகள் ஜப்பானில் சந்தித்துப் பேசினர். ஜி-7 இல்லாத ஆறு நாடுகளின் நிதி அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களில் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங்கும் ஒருவர்.
பொருளியல் நிலையற்றத்தன்மை குறித்து நிதி அமைச்சர்கள் சந்திப்பின்போது கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டது.

