தென்கிழக்காசியா முழுவதும் அண்மைய நாள்களில் கடுமையான வெயில் வாட்டிவருகிறது. தீவிரமான பருவநிலை மாற்றத்தின் எதிரொலியாக இது கருதப்படுகிறது.
சிங்கப்பூரில் நேற்று முன்தினம், 40 ஆண்டுகள் காணாத அளவு வெப்பநிலை 37 டிகிரி செல்சியசாகப் பதிவானது. மே மாதத்தில் பதிவான ஆக அதிக வெப்பநிலையும் அதுவே.
மலேசியாவில் இவ்வாண்டு 14 பேர் வெப்பத் தாக்குதலுக்கு ஆளானதாகக் கூறப்பட்டது.
வியட்னாமில் இம்மாதத் தொடக்கத்தில் 44.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
வெப்பக் குறியீடு அபாய அளவை எட்டியதால் பிலிப்பீன்ஸ் பள்ளிகளில் பாட நேரத்தைக் குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
செம்பனை எண்ணெய் உற்பத்தியில் முத்திரை பதித்துள்ள தென்கிழக்காசியா, சுட்டெரிக்கும் வெயிலால் உற்பத்தி பாதிக்கப்படும் என்று அஞ்சுகிறது.
'எல் நினோ' பருவ நிலையால் இவ்வாண்டு வறட்சி ஏற்படும் என்றும் அதனால் உணவு விலை அதிகரிக்கும் என்றும் தாய்லாந்து எச்சரித்துள்ளது. வெப்ப அலைகள், பெரும் புயல்கள் போன்றவை அடிக்கடியோ தீவிரமாகவோ பாதிக்கும் எனக் கூறப்பட்டது.
'மோக்கா' புயலை முன்னிட்டு பங்ளாதேஷும் மியன்மாரும் பல்லாயிரக்கணக்கானோரைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளன.