உக்ரேன்: மேலும் வலுக்கும் உலக நாடுகளின் ஆதரவு
லண்டன்: பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனாக் உக்ரேனுக்குக் கூடுதல் ஆயுத உதவி வழங்க உறுதி அளித்துள்ளார்.
திட்டமின்றி திடீரென்று பிரிட்டன் சென்ற உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியை செக்கர்சில் உள்ள தமது அதிகாரபூர்வ இல்லத்தில் வரவேற்று அவர் பேசினார்.
சந்திப்பில் நூற்றுக்கணக்கான தற்காப்பு ஏவுகணைகள், 200 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் தாக்கக்கூடிய ஆளில்லா வானூர்திகள் உள்ளிட்டவற்றை உக்ரேனுக்கு வழங்க பிரதமர் சுனாக் உறுதிகூறினார்.
ஓராண்டுக்குமேல் அன்றாடம் தாக்குதலுக்கு இலக்காகும் உக்ரேனியர்களுக்கு அனைத்துலகச் சமூகத்தின் தொடர்ச்சியான ஆதரவு தேவை என்று திரு சுனாக் வலியுறுத்தினார்.
இந்நிலையில், 'ஜி7' நாடுகளின் தலைவர்கள் ரஷ்யா மீதான தடைகளை மேலும் கடுமையாக்கத் திட்டமிடுவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
எரிபொருள் உள்ளிட்ட ஏற்றுமதிப் பொருள்கள் தொடர்பில் தடைகள் விதிப்பது குறித்து ஜப்பானில் நடைபெறும் உச்சநிலை மாநாட்டில் அவர்கள் கலந்தாலோசிப்பர். மாநாடு இம்மாதம் 19, 20, 21ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.
ரஷ்யாவின் வருங்கால எரிசக்தி உற்பத்தியைக் கீழறுக்கும் விதமாகவும் ரஷ்ய ராணுவத்துக்கு உதவும் வர்த்தகங்களை ஒடுக்கும் விதமாகவும் அத்தடைகள் அமையக்கூடும்.
'ஜி7' கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா மற்ற நாடுகளிடம் தடைகள் குறித்து இணக்கம் காணும்படி வலியுறுத்திவருகிறது.
இதற்கிடையே, சீனாவின் சிறப்புத் தூதர் லி ஹுய் இரு நாள் பயணம் மேற்கொண்டு நாளை கியவ் செல்கிறார். சீனாவின் தலைமையிலான அமைதிப் பேச்சு தொடர்பில் அவரது வருகை அமையும் என்று உக்ரேன் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி அவரை நாளை கியவ்வில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவுக்கான சீனாவின் முன்னாள் தூதரான லி ஹுய் அமைதிப் பேச்சு தொடர்பில் ரஷ்யா, போலந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் செல்வார்.