கோலாலம்பூர்: மலேசியாவில் சில ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்து பின்னர் அவர்கள் வேலையின்றித் தவிக்க நேரிடும் சம்பவங்கள் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்தகைய ஆட்சேர்ப்பு நிறுவனங்கள்மீது தடை விதிக்கப்படும் என்றும் அவற்றின் ஆட்சேர்ப்பு உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் மலேசிய அரசாங்கம் நேற்று அறிவித்தது.
தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடியேறிகள் மலேசியாவில் வேலையின்றித் தவிப்பதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் சென்ற வாரம் தகவல் வெளியிட்டிருந்தது. அவர்களில் பெரும்பாலோர் பங்ளாதேஷையும் நேப்பாளத்தையும் சேர்ந்தவர்கள்.
அதிகமான தொகையை ஆட்சேர்ப்புக் கட்டணமாகச் செலுத்திய அவர்கள் மலேசிய மண்ணை மிதித்த பிறகே உறுதிகூறப்பட்டதுபோல வேலையில் சேர இயலாது என்று தெரிந்துகொண்டனர்.
அத்தகைய சம்பவங்கள் தொடர்பில் சென்ற மாதம் விசாரணைக்கு உத்தரவிட்டது மலேசிய அரசாங்கம்.
ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் கேள்விகளுக்குப் பதிலளித்த மலேசியத் தொழிலாளர் துறை, சம்பந்தப்பட்ட ஆட்சேர்ப்பு நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்க உறுதியளித்தது.
முழுமையான விசாரணை நடத்தப்படும். சட்டவிரோத நடவடிக்கைகள் எதுவும் சகித்துக்கொள்ளப்படமாட்டா என்று மின்னஞ்சல் மூலம் அது தெரிவித்தது.
மோசடியில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டு ஊழியர்களில் சிலரை அரசாங்க வசிப்பிடங்களில் தங்க வைத்திருப்பதாகவும் அவர்களின் தங்குமிடச் செலவையும் சம்பளத்தையும் வழங்கும்படி சில நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் மலேசியத் தொழிலாளர் துறை குறிப்பிட்டது.
தங்குமிடங்களில் நேப்பாள ஊழியர்கள் இருவர் உயிரை மாய்த்துக்கொண்டதாக வெளியான தகவல்களை தொழிலாளர் துறை மறுத்தது. வேலை மோசடி தொடர்பில் மலேசியாவுக்கு விசாரிக்கச் சென்ற நேப்பாள ஆட்சேர்ப்பு முகவர் ஒருவர் உயிரிழந்ததாகக் காவல்துறையை மேற்கோள்காட்டி அது குறிப்பிட்டது. அதுகுறித்த விசாரணை தொடர்கிறது.

