பெய்ஜிங்: சீன அரசாங்கம் நாட்டில் குறைந்துவரும் குழந்தை பிறப்பு விகிதத்தை மேம்படுத்த முனைந்துள்ளது.
திருமணம், பிள்ளை வளர்ப்பு ஆகியவை தொடர்பில் புதிய அணுகுமுறையை ஊக்குவிக்கும் முன்னோடித் திட்டத்தை 20க்கு மேற்பட்ட நகரங்களில் தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
திருமணம் செய்யவும் பிள்ளை பெற்றுக்கொள்ளவும் சீனப் பெண்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் குறித்து அரசாங்க ஆதரவு பெற்ற 'குளோபல் டைம்ஸ்' நாளேடு நேற்று தகவல் வெளியிட்டது.
திருமணத்தை ஊக்குவித்தல், பொருத்தமான வயதில் பிள்ளை பெற்றுக்கொள்ளல், பெற்றோர் இருவரும் பிள்ளை வளர்ப்பு தொடர்பான பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளல், மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளை பரிசுத் தொகை தருதல் போன்ற பழங்காலப் பழங்கங்களுக்குத் தடை விதித்தல் ஆகிய அம்சங்களில் புதிய திட்டங்கள் கவனம் செலுத்தும் எனக் கூறப்பட்டது.
பிள்ளை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக சீன அரசாங்கம் ஏற்கெனவே வரிச் சலுகை, வீடமைப்புச் சலுகைகள், மூன்றாவது குழந்தைக்கு இலவசக் கல்வி அல்லது மானியம் போன்றவற்றை அறிவித்துள்ளது.
1980 முதல் 2015ஆம் ஆண்டு வரை சீனா ஒரு குழந்தைக் கொள்கையைக் கடுமையாகப் பின்பற்றியது. பின்னர் ஒரு குடும்பத்தில் மூன்று குழந்தைகள் வரை அனுமதிக்கப்பட்டது.
60 ஆண்டுகளில் முதல்முறையாக அங்கு மக்கள்தொகை குறைந்ததை அடுத்து கருத்தரிப்பு விகிதத்தை உயர்த்தும் முயற்சிகள் குறித்து அரசாங்கத்துக்கு அதன் ஆலோசகர்கள் பரிந்துரைத்தனர்.
மணமாகாத, ஒற்றைப் பெண்கள் கருமுட்டைகளை உறையவைப்பதும் அவற்றில் அடங்கும்.

