செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
350e477b-58c3-4dcb-818b-2b1fd4a96b18
-

100 கிலோ மீன்பிடி வலைகளை அகற்றிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

சாபா: மலேசியாவின் சாபா மாநிலத்தில் மன்டனானி தீவுக்கருகே பவளப்பாறைகளை சோதிக்கச் சென்ற ஆர்வலர்கள் கிட்டத்தட்ட 100 கிலோ எடையுள்ள பழைய மீன்பிடி வலைகளை அப்புறப்படுத்தியுள்ளனர். ஆண்டுக்கொருமுறை அவர்கள் அவ்வாறு சோதனையிடுவது வழக்கம். கைவிடப்பட்ட அல்லது தொலைந்துபோன மீன்பிடி வலைகள் கடலின் ஆழத்தில் உள்ள பவளப்பாறைகள்மேல் படிந்து காணப்பட்டன. 20 முதல் 30 மீட்டர் நீளத்திற்குக் காணப்பட்ட வலைகளில் மீன்கள், ஆமைகள், சுறா மீன்கள், டால்பின்கள் போன்றவை சிக்கியிருந்ததாகக் கூறப்பட்டது.

சீனாவில் உளவு பார்த்ததாக 78 வயது அமெரிக்கருக்கு ஆயுள் தண்டனை

பெய்ஜிங்: சீனாவில் உளவு பார்த்ததாக 78 வயது அமெரிக்க ஆடவருக்கு நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜான் லியுங் எனும் அந்த ஆடவர் ஹாங்காங்கில் நிரந்தரவாசத் தகுதி பெற்றவர். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறித்து சூச்சோ நகர நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ 'வீ சேட்' பக்கத்தில் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆடவரின் சொத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு $96,300. உளவு பார்த்த சந்தேகத்தின் பேரில் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் லியுங் கைது செய்யப்பட்டார். அவரது குற்றச்செயல் குறித்த மேல்விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

தாயை அடித்துக் கொன்ற மகன்

சோல்: தென்கொரியாவில் தனி வீடு செல்ல அனுமதி மறுத்ததால் தாயை அடித்துக் கொன்ற ஆடவருக்கு ஏழு ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 30களில் உள்ள அந்த ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை. இவ்வாண்டு ஜனவரி மாதம் தாயாரை அவர் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்பட்டது. அதில் மாது பலத்த காயமடைந்தார். அவரது விலா எலும்புகள் முறிந்தன. இடது சிறுநீரகம் சேதமுற்றது. மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தும் அது பலனளிக்காமல் மாது மாண்டார். அதையடுத்து ஆடவர் காவல் நிலையத்தில் சரணடைந்ததை நீதிமன்றம் கருத்தில் கொண்டது. சிறு வயதில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட அவரது இளமைக்காலம் சிரமமாக இருந்ததாகக் கூறப்பட்டது. ஏற்கெனவே 2019ல் தாயாரை அந்த ஆடவர் தாக்கியதாகத் தெரிகிறது.