பேங்காக்: தாய்லாந்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஜனநாயகத்தை அடக்கி வைத்து ஆட்சி செய்த முடியாட்சி சார்ந்த அரசியல் அமைப்பு அண்மைய தேர்தலில் பலத்த அடி வாங்கியது.
ஆனால், தேர்தலில் அதிக இடங்களில் வென்ற 'மூவ் ஃபார்வர்ட்' கட்சி தான் அறிவித்துள்ள மாற்றங்களை உண்மையிலேயே கொண்டு வர முடியுமா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.
அந்நாட்டில் பல அரசியல் தலைவர்கள் மக்களைக் கவரும் விதமாக இலவசங்களை அறிவித்துள்ள நிலையில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஃபார்வர்ட் மூவ் கட்சியின் தலைவர் பிட்டா லிம்ஜரோன்ராட் முடியாட்சிக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களைத் தண்டிக்கும் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப் போவதாகக் கூறி தேர்தலில் போட்டியிட்டார்.
தற்பொழுது தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் தனது நிலைப்பாட்டிலிருந்து மாறப்போவதில்லை என்று சூளுரைத்துள்ளார்.
தாய்லாந்தில் மன்னரைக் குறைகூறினால் ஒருவர் 15 ஆண்டுகள் வரை சிறையில் தள்ளப்படலாம். தாய்லாந்தில் மக்கள், மன்னர் இடையிலான உறவு முறை பாதிக்கப்படலாம் எனத் தாம் கவலைப்படுவதாக திரு பிட்டா கூறுகிறார். நாடாளுமன்றத்தில் முழுமையாக, முதிர்ச்சியுடன் கூடிய விவாதத்தை வெளிப்படையாக நடத்தி இந்த உறவு முறையை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லலலாம் எனத் தீர்மானிக்கப் போவதாக திரு பிட்டா கூறியுள்ளார்.
புதுயுகத்தில் மக்கள் மனத்தில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக அவர் விளக்கினார். முடியாட்சி தொடர்பான சட்டம் இதுநாள் வரை எவரும் மாற்ற முடியா ஒன்றாக கருதப்பட்டு வந்த நிலையில் திரு பிட்டாவின் முயற்சி இடம்பெறுகிறது.

