பெண்களுக்கு ஆணுறைகளை அனுப்பிய மர்ம ஆசாமி
மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை 65 பெண்களுக்கு அஞ்சலில் அனுப்பிய மர்ம ஆசாமி குறித்து மெல்பர்ன் நகர காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மெல்பர்னின் தென் கிழக்கு மற்றும் கிழக்குப் புறநகர்ப் பகுதியில் உள்ள பெண்களுக்கு ஆணுறைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதனுடன் கையால் எழுதப்பட்ட அருவருப்பான தகவல்களும் இருந்தன. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிட்ட ஒரு பிரிவை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறினர். தபால் கிடைத்த அனைத்துப் பெண்களும் 1999ஆம் ஆண்டில் ஒரே பள்ளியில் படித்தவர்கள்.
மலேசியாவில் சிங்கப்பூர்
முதலாளி மீது வழக்கு
மலாக்கா: மலேசியாவின் மலாக்காவில் 'டாஃபிஸ்' எனும் சமயப் பள்ளியை நிறுவிய சிங்கப்பூர் முதலாளியான முஹமங்ட ஃபிர்டாவுஸ் அப்துல் ரஷிஃப், 40, தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்த அவர் கோரிக்கை விடுத்தார். அவரது பள்ளியில் படித்த மாணவர்களிடம் அவர் பாலியல் செயல்களில் ஈடுபட்ட ஐந்து குற்றச்சாட்டு களை எதிர்நோக்குகிறார். இதே சமயப் பள்ளியில் ஆறு மாணவர்களிடம் பாலியல் செயல்களில் ஈடுபட்டதற்காக அவரது 36 வயது இளைய சகோதரரும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
'அல்லா' பயன்படுத்துவது
குறித்து பரிந்துரை
புத்ராஜெயா: 'அல்லா' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது குறித்து பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாக மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் முழுமையான தீர்வு காணவும் மலேசியாவில் இன, மதங்களுக்கு இடையே ஒற்றுமை, அமைதியை வலுப்படுத்தவும் பரிந்துரை உதவும் என்றும் அவர் கூறியதாக பெர்னாமா வெளியிட்ட செய்தி தெரிவித்தது.
ஆட்சியாளர் மன்றத்திடம் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக மாமன்னரின் ஒப்புதலை அமைச்சரவை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் அல்லாதவர்கள் 'அல்லா' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது தொடர்பான தற்போதைய நிலைப்பாட்டில் தனது அரசாங்கம் உறுதியாக இருக்கும் என்று பிரதமர் அன்வார் கூறியுள்ளார்.

