லாகூர்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தான் மீண்டும் கைதுசெய்யப்படக் கூடும் என்று தெரிவித்துள்ளார். தன் வீட்டைச் சுற்றிலும் ஏராளமான காவல்துறையினருடன் பரபரப்பான சூழல் காணப்படுகிறது. எனவே, எந்த நேரத்திலும் நான் கைதுசெய்யப்படலாம் என்றே கருதுகிறேன்.
"நான் கைதுசெய்யப்படுவதற்கு முன்பு டுவிட்டரில் பதிவிடும் இந்தப் பதிவே கடைசிப் பதிவாக இருக்கும்," என்று அவர் தனது டுவிட்டரில் நேற்று பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில அரசு, இம்ரான் கானுக்கு 24 மணி நேரம் கெடு விதித்திருந்தது. அதாவது இம்ரான் கானின் வீட்டில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள் அனைவரும் காவல்துறையிடம் சரண் அடைய வேண்டும்.
இல்லையெனில், அரசாங்கத்தின் கடுமையான நடவடிக்கைகளை அவர்கள் எதிர்நோக்கக்கூடும் என்று தகவல் துறை அமைச்சர் அமிர் மிர், செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
ஊழல் வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் முன்னிலையாகச் சென்றுகொண்டிருந்த இம்ரான் கானை சுற்றி வளைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்தனர்.
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான திரு இம்ரான் கான், கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் கைதுசெய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டது சட்டத்திற்குப் புறம்பானது என அவரை அதே வாரம் விடுதலை செய்யும்படி அங்குள்ள உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. அதன்படி அவர் விடுவிக்கப்பட்டார்.
அவர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது நாடு முழுதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களிலும் வன்முறைகளிலும் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினருக்கும் இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்தக் கலவரத்தில், ராணுவத் தளபதியின் அதிகாரபூர்வ மாளிகை உள்ளிட்ட ராணுவத்திற்குச்சொந்தமான சொத்துகளைத் தீக்கிரையாக்கினர்.
ராணுவச் சொத்துகளைச் சேதப்படுத்திய கலவரக்காரர்களின் மீது ராணுவச் சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ராணுவம் எச்சரித்தது. அதற்குப் பின், இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோரை ராணுவத்தினர் பிடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. "ராணுவச் சொத்துகளைச் சேதப்படுத்தியவர்களில் 30 முதல் 40 பேர் வரை ஈடுபட்டிருக்கலாம். அவர்கள் உடனடியாக ராணுவத்திடம் சரணடைய வேண்டும். இந்த உத்தரவை மீறும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான சட்டம் பாயும்," என்று மாநில அமைச்சர் மிர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

