லுகோ: இத்தாலியின் வடகிழக்குப் பகுதியை வாட்டி வதைத்துவரும் வெள்ளத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆயிரக்கணக்கானோர் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளதுடன் வெள்ளத்தால் பயிர்களும் நாசமடைந்ததாக அறியப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் தங்களின் 70களில் உள்ள இரு விவசாயிகளும் அடங்குவர் என்றும் அவர்கள் உடலில் மின்சாரம் பாய்ந்து உயிர் போனது என்றும் கூறப்படுகிறது.
தங்களின் வீடுகளை விட்டு கிட்டத்தட்ட 10,000 பேர் வெளியேறியதை அடுத்து வெள்ள அபாயத்தில் இருக்கும் மேலும் மூன்று கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறுமாறு அதிகாரிகள் உடனடி ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளனர்.
இதற்கிடையே, மின்சாரம் ஆங்காங்கே பழையபடி வந்துவிட்டாலும் இன்னமும் 27,000 பேர் இருட்டில் தவிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் 400 சாலைகளும் சேதமடைந்து உள்ளதாக அறியப்படுகிறது.

