வெலிங்டன்: நியூசிலாந்தில் உள்ள தங்குவிடுதி ஒன்றுக்குத் தீவைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 48 வயது ஆடவர் ஒருவர், வேறொருவரே தீயை மூட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார். அந்தச் சம்பவத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்தனர்.
வழக்கு விசாரணையின்போது, தமக்குப் பிணை வழங்க வேண்டும் என்றும் நல்ல வழக்கறிஞர் வேண்டும் என்றும் உரக்கக் கூறிய அவர், வேறொருவர் தீயை மூட்டியதாகச் சொன்னார்.
தீ மூட்டியதன் தொடர்பில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் அவர்மீது இரண்டு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில், 'லோஃபர்ஸ் லாட்ஜ்' எனும் அந்த நான்கு மாடி விடுதிக்குத் தீவைத்தது ஒரு குற்றச்சாட்டு. முன்னதாக, அக்கட்டடத்தில் உள்ள இருக்கையை எரித்தது மற்றொரு குற்றச்சாட்டு.
நீதிமன்றத்தில் அந்த ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவர் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.
தீச்சம்பவம் தொடர்பில் வேறு யாரையும் தாங்கள் தேடவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

