முதியோர் இல்லத்தில் ஆஸ்திரேலியக் காவல்துறையினர் 'டேசர்' துப்பாக்கியால் சுட்டதில் 95 வயது மூதாட்டி ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். அந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுவதாக காவல்துறையினர் கூறினர்.
கடந்த புதன்கிழமை சிட்னியின் தென்மேற்கில் சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த முதியோர் இல்லத்திற்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.
அங்கு தங்கியிருக்கும் கிளேர் நௌலண்ட் என்ற அந்த மூதாட்டி, அவரது அறைக்கு வெளியில் கத்தி ஒன்றைப் பிடித்துக்கொண்டிருந்ததை ஊழியர் ஒருவர் கண்டறிந்ததாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை உதவி ஆணையர் பீட்டர் கோட்டர் கூறினார்.
காவல்துறையினர் இருவர் திருவாட்டி நௌலண்டிடம் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தனர். இருப்பினும், அவர் கத்தியைக் கீழே போட மறுத்ததாலும் காவல்துறையினரை அவர் அணுகியதாலும் அதிகாரிகளில் ஒருவர் 'டேசர்' துப்பாக்கியால் அவரைச் சுட்டார். அதை அடுத்து, அந்த மூதாட்டி தரையில் விழுந்தார்.
சுடப்பட்ட நேரத்தில், காவல்துறையினரை அவர் மெதுவாக அணுகியதாக செய்தியாளர் கூட்டத்தில் திரு கோட்டர் தெரிவித்தார். அந்த மூதாட்டி கத்தியைப் பிடித்தவாறு, ஊன்றுகோலுடன் நடந்துகொண்டிருந்ததாக அவர் சொன்னார்.
'டிமென்ஷியா' எனும் நினைவாற்றல் இழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள அந்த மூதாட்டி, முதியோர் இல்லத்தின் சமையலறையிலிருந்து கத்தியை எடுத்திருந்தார்.
அவர் தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். இச்சம்பவத்தால் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது.

