கோஹ்லி சதம்; இறுதிக்கட்டத்தில் ஐபிஎல்
ஹைதராபாத்: ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் விராத் கோஹ்லி (படம்) முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். இதுவரை அவர் ஆறு சதங்களை விளாசி உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்லுடன் அவர் முதலிடத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.
நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணியும் பெங்களூரு அணியும் மோதின. ஆட்டத்தை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் பெங்களூரு களமிறங்கியது. முதலில் பந்தடித்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களை எடுத்தது. சிறப்பாக விளையாடிய கிளாசன், 51 பந்துகளில் 104 ஓட்டங்களைக் குவித்தார்.
கடினமான இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு கோஹ்லியும் டூபிளஸிசும் அருமையான தொடக்கம் தந்தனர். கோஹ்லி 63 பந்துகளில் சதமடித்தார். டூபிளஸிஸ் 71 ஓட்டங்களை எடுத்தார்.
இறுதியில் பெங்களூரு அணி 19.2 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி, புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது.
ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் சதம் அடிப்பது இதுவே முதல்முறை.
ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது, முதல் நான்கு இடங்களைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. குஜராத் அணி மட்டும் தற்போது பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
இபிஎல்: முதல் நான்கு இடங்களுக்குள் வர நியூகாசல் யுனைடெட் முனைப்பு
லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் பிரைட்டன் குழுவை 4-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி, பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் வரும் வாய்ப்பைக் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியுள்ளது நியூகாசல் யுனைடெட்.
முதல் நான்கு இடங்களுள் இடம்பெற, எஞ்சிய இரு ஆட்டங்களில் ஒன்றில் மட்டும் நியூகாசல் வென்றால் போதும். இபிஎல் பட்டியலில் 69 புள்ளிகளுடன் நியூகாசல் மூன்றாம் இடத்திலும் 66 புள்ளிகளுடன் மான்செஸ்டர் யுனைடெட் நான்காவது இடத்திலும் உள்ளன. மேன்யூ விளையாடுவதற்கு இன்னும் மூன்று ஆட்டங்கள் உள்ளன. லிவர்பூல் விளையாடுவதற்கு இன்னும் இரண்டு ஆட்டங்கள் மட்டும் எஞ்சியுள்ள நிலையில், 65 புள்ளிகளுடன் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

