சோல்: இரண்டு வயதுக் குழந்தையைப் பட்டினி போட்டு கொன்ற தம்பதிக்கு விதிக்கப்பட்ட 30 ஆண்டு சிறைத் தண்டனையை தென்கொரிய உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த வழக்கில் கீழ் நீதிமன்றம் ஏற்கெனவே அளித்திருந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் நேற்று முன்தினம் தெரிவித்தன.
2021 அக்டோபரில் இருந்து 2022 மார்ச் வரை அந்தக் குழந்தையையும் அதன் 17 மாதச் சகோதரரையும் நிராகரித்ததாக அந்த 22 வயது மாது மற்றும் அவரின் 29 வயது கணவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது.
கடும் ஊட்டச்சத்து குறைபாடு, மூளையில் ரத்தக்கசிவு காரணமாக 2022 மார்ச் மாதம் அச்சிறுமி உயிரிழந்தாள்.
அப்போது, நாயின் மலத்தையும் அதன் உணவையும் சாப்பிட்ட அச்சிறுமி தரையில் விழுந்து கிடந்ததைக் கண்டும் அவளின் வளர்ப்புத் தந்தை ஒன்றுமே செய்யவில்லை.
மேலும், குப்பைக் கூளத்தில் உணவைத் தேடிய அச்சிறுமியை அந்த ஆடவர் உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் கண்டறியப்பட்டது.
அச்சிறுமியின் வயதுடைய சிறுவர்களின் சராசரி எடையுடன் ஒப்பிடுகையில், அச்சிறுமியின் எடை பாதியளவு மட்டுமே இருந்தது. அவளது செரிமான மண்டலத்தில் ஒரு துண்டு கேரட் மட்டுமே இருந்தது பிரேதப் பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
அச்சிறுமி இறப்பதற்கு சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பே அத்தம்பதியர் அவளை முற்றிலுமாக பட்டினி போட்டுவிட்டது விசாரணையில் தெரியவந்தது.
அத்தம்பதிக்கு மாதந்தோறும் 350,000 வோன் ($355) அரசாங்க உதவியும் அச்சிறுமியின் சொந்த தந்தையிடம் இருந்து 400,000 வோன் பணமும் கிடைத்தது.
பட்டினி போடப்பட்டதில் அச்சிறுமியின் சகோதரருக்கும் கடும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டது. அத்தம்பதியரால் அவனும் கொடுமைப்படுத்தப்பட்டான்.

