சான் ஃபிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் 'மாடல் 3' கார்கள் சிலவற்றுக்கு US$1,300க்குமேல் (S$1,750) விலைத் தள்ளுபடி வழங்குகிறது மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா.
டெஸ்லா இணையப் பக்கத்தில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய மறுஆய்வில் இது தெரியவந்துள்ளது.
ஐரோப்பாவில் ஏற்கெனவே டெஸ்லா கார்களுக்கு பெரிய விலைத் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெஸ்லா கார்களுக்கு விலைத் தள்ளுபடியை வழங்க அந்நிறுவனம் முடிவு எடுத்துள்ளது.
இவ்வாண்டு பொருளியல் சவால்களையும் கடும் போட்டியையும் எதிர்நோக்கிவரும் டெஸ்லா, பல்வேறு பகுதிகளில் வாகன விலையைக் கணிசமாகக் குறைத்துள்ளது.
இருப்பைக் காலி செய்ய பொதுவான கார் தயாரிப்பு நிறுவனங்களின் உத்திகளைப் பயன்படுத்தும் நிலைக்கு டெஸ்லா தள்ளப்பட்டு உள்ளதாக கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
டெஸ்லா நிறுவனம் தனது கார்களை முதன்முறையாக விளம்பரப்படுத்த முற்படும் என்று அதன் தலைமை நிர்வாகி எலன் மஸ்க் பங்குதாரர்களிடம் கடந்த செவ்வாய்க்கிழமை கூறினார்.
இது, டெஸ்லா கார்களுக்கான தேவையை அதிகரிக்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்துக்கு அடுத்த 12 மாதங்கள் சவாலான காலகட்டமாக இருக்கும் என்று திரு மஸ்க் சொன்னார்.

