ஃபேன்ஸா: நூறாண்டுகளில் ஆக மோசமானதாகக் கருதப்படும் வெள்ள பாதிப்பில் இருந்து மெல்ல மீண்டெழும் இத்தாலிக்கு உலக நாடுகளிடமிருந்து உதவி கிடைத்துள்ளது.
அங்கு வெள்ளத்தால் குறைந்தது 14 பேர் உயிரிழந்ததுடன் ஆயிரக்கணக்கானோர் தண்ணீர் தேங்கிய வீடுகளில் அல்லது மீட்பு நிலையங்களில் சிக்கித் தவிக்கின்றனர்.
ஆறு மாதங்கள் பெய்யக்கூடிய மழை 36 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்ததைத் தொடர்ந்து, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி இடம்பெற்று வருகிறது. இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, பேரிடரால் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் காட்டும் புகைப்படங்களை ஜப்பானில் நடைபெறும் ஜி7 உச்சநிலை மாநாட்டில் பகிர்ந்தார்.
அதையடுத்து, இத்தாலிக்கு உதவ பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன் உறுதி அளித்துள்ளார்.
எமிலியா ரோமக்னா வட்டாரத்தில் தங்களது வீடுகளிலிருந்து 15,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த வட்டாரத் தலைவர், வெள்ளத்தை நிலநடுக்கத்தோடு ஒப்பிட்டு உள்ளார். இத்தாலியில் பெய்த கனமழையால் பல பில்லியன் யூரோ மதிப்பில் சேதம் ஏற்பட்டு உள்ளது.

