எல் சால்வடோர் விளையாட்டரங்கில் நெரிசல்; பலர் மரணம்

எல் சால்வடோர் விளையாட்டரங்கில் நெரிசல்; பலர் மரணம்

1 mins read
3da159f2-3b8b-4b87-9040-bdcea2f7058e
காயமடைந்த ஓர் ஆடவருக்கு உதவும் அதிகாரிகள். படம்: ஏஎஃப்பி -

சான் சால்வடோர்: லத்தீன் அமெரிக்க நாடான எல் சால்வடோரின் தலைநகர் சான் சால்வடோரில் இருக்கும் விளையாட்டரங்கில் நெரிசலில் சிக்கி குறைந்தது 12 பேர் மாண்டனர்.

கஸ்கட்லான் விளையாட்டரங்கில் அலியான்ஸா, ஃபாஸ் ஆகிய காற்பந்துக் குழுக்களுக்கிடையே நடைபெற்றுக்கொண்டிருந்த ஆட்டத்தின்போது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

அதைத் தொடர்ந்து ஆட்டம் நிறுத்தப்பட்டது.

மாண்ட அனைவரும் 18 வயதைத் தாண்டியவர்கள் என்று காவல்துறையினர் கூறியிருந்தனர்.

விளையாட்டரங்கின் நுழைவாயில்கள் மூடப்பட்ட பிறகு பல ரசிகர்கள் அரங்கில் நுழைய முயன்றதால் அசம்பாவிதம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆட்டம் யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

ரசிகர்கள் அமர்ந்திருந்த பகுதியில் களேபரமாக இருந்ததையொட்டி ஆட்டம் நிறுத்தப்பட்டது நேரலையில் தெரிந்தது.