ஹிரோஷிமா: ஜப்பானிய, தென்கொரியத் தலைவர்கள் தங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை மறந்து
வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில் ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட கொரிய வீரர்களுக்கு கூட்டாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவும் தென் கொரிய பிரதமர் யூன் சுக்-இயோலும் தங்களுடைய துணைவியாருடன் நினைவிடத்தில் வெண்ணிற மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
ஹிரோஷிமா நகரில் நடைபெற்ற 'ஜி7' மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்த உறுப்பினர் அல்லாத நாடுகளில் ஒன்றான தென்கொரியா அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டது.
இந்த நினைவிடத்திற்கு இரு நாட்டு தலைவர்களும் கூட்டாகச் செல்வது இது முதல்முறை. ஜப்பானிய பிரதமர் ஒருவர் அவ்வாறு அந்த நினைவிடத்திற்குச் செல்வது இரண்டாவது முறையாகும்.
"அணுகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வருத்தம் தெரிவிக்கும் அதே வேளையில் இந்தப் பயணம் அமைதியான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும். பிரதமர் கிஷிடாவின் துணிச்சலான இந்தச் செயல் என்றும் நினைவுகூரப்படும்," என்று நினைவிடத்திற்குச் சென்ற பிறகு இருதரப்பு கூட்டத்தில் தென்கொரிய பிரதமர் திரு யூன் தெரிவித்தார்.
தென்கொரியாவும் ஜப்பானும் அமெரிக்காவின் நட்பு நாடுகள். ஆனால் 1910 முதல் 1945 வரை கொரியாவில் ஜப்பானின் கொடுமையான ஆட்சி நடந்தது தொடர்பில் இரு நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்த நிலையில் நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் இந்த நினைவு அஞ்சலியில் இரு தலைவர்களும் கூட்டாக பங்கேற்றுள்ளனர்.

