பெய்ஜிங்: 'ஜி7' மாநாட்டில் சீனாவுக்கு எதிராக நடத்தப்பட்டதாகக் கூறி அம்மாநாடு நடைபெற்ற ஜப்பானின் தூதரை அழைத்து சீன அரசாங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
சீன அரசாங்கத்தின் ஊது குழலான 'குளோபல் டைம்ஸ்' ஜி7 மாநாட்டை சீனாவுக்கு எதிராக நடத்தப்பட்ட பயிலரங்கு என்று வருணித்துள்ளது.
சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட ஜி7 பிரகடனங்களில் தைவான், அணுவாயுதங்கள், பொருளியல் அச்சுறுத்தல், மனித உரிமை மீறல்கள் போன்ற விவகாரங்கள் சீனாவுக்கு எதிராக சுட்டிக்காட்டப்பட்டன.
இது, பெய்ஜிங்குக்கும் அமெரிக்கா உட்பட ஜி7 நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை அதி கரிக்கும் என்று குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டது.
"மேற்கத்திய உலகில் சீனாவுக்கு எதிரான அலையை ஏற் படுத்த அமெரிக்கா முயற்சி செய்கிறது.
"அது மட்டுமல்லாமல் இது சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகும்," என்று தனது கட்டுரையில் குளோபல் டைம்ஸ் சாடியது.
மேலும் ஜப்பான், பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 நாடுகளின் அறிக்கையை கடுமையாக எதிர்ப்பதாக சீனா வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
சென்ற ஞாயிற்றுக்கிழமை ஜப்பானியத் தூதரை அழைத்து ஜி7 மாநாட்டுக்கு தனது கடுமையான எதிர்ப்பை சீனா பதிவு செய்தது.

