அபு தாபியுடன் 1எம்டிவி
குறித்து பேச்சு: அன்வார்
கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், '1எம்டிபி' விவகாரம் குறித்து அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அபுதாபி நிர்வாக மன்றத்தின் தலைவருமான ஷேக் காலித் முஹமட் ஸாயெட் அல் நஹ்யானுடன் விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மலேசியாவுக்கு பட்டத்து இளவரசர் நான்கு நாள் வருகையளிக்கும்போது அந்த விவகாரம் அவரிடம் விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.
பாகிஸ்தான் பெண்கள்
பள்ளியில் குண்டுவெடிப்பு
பெஷாவர்: பாகிஸ்தானில் உள்ள இரண்டு பெண்கள் பள்ளிகளைப் போராளிகள் குண்டுவைத்து தகர்த்துள்ளனர். இரண்டு பள்ளிகளும் காலியாக இருந்ததால் யாரும் காயமடையவில்லை. பெண் கல்விக்கு சில இஸ்லாமிய போராளிகள் எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் வடக்கு வஸிர்ஸ்டானில் ஹாசு கெல், குல் மோசாகி என்ற இரு இடங்களில் இருந்த பள்ளிகளை போராளிகள் குண்டுவைத்து வெடிக்கச் செய்துள்ளனர். இதில் பல வகுப்பறைகள் நாசமடைந்தன. இரண்டு இடமும் தலிபான் ஆட்சி நடத்தும் ஆஃப்கானிஸ்தானிலிருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன.
ஜூன் 1ஆம் தேதி ரஷ்யாவின்
கட்டுப்பாட்டில் பக்முட் நகரம்
மாஸ்கோ: மக்முட் நகரிலிருந்து ஜூன் 1ஆம் தேதி தனது வீரர்கள் வெளியேறுவார்கள் என்றும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்கு மக்முட் மாற்றப்படும் என்றும் வேக்னர் படை தெரிவித்துள்ளது.
இந்த நகரத்தை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஆனால் மக்முட் நகரம் முழுமையாக கைப்பற்றப்படவில்லை என்று ஜி7 மாநாட்டில் பங்கேற்றபோது உக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி மார்தட்டிக் கொண்டார்.
மக்முட் நகரம் கைப்பற்றியதற்காக படை வீரர்களை ரஷ்ய அதிபர் புட்டின் பாரட்டியுள்ளார். வீரர்கள் அனைவருக்கும் விருது வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சோவியத் புரட்சியின் நினைவாக பக்முட் நகரம் முன்பு ஆர்டிமோவ்ஸ் என்று அழைக்கப்பட்டது. ஆனால் உக்ரேன் அதன் பெயரை பின்னர் மாற்றிவிட்டது.
ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு
$1.75 பில்லியன் அபராதம்
டப்ளின்: பயனீட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கத் தவறியதாகக் கூறி ஃபேஸ்புக்கை நடத்தும் மெட்டா நிறுவனத்துக்கு ஐரோப்பிய சங்கம் சாதனை அளவாக 1.2 பில்லியன் யூரோ ($1.75 பி) அபராதம் விதித்துள்ளது.

