பேங்காக்: தாய்லாந்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்ற எட்டு அரசியல் கட்சிகளின் கூட்டணி, நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை மாற்றி எழுதுவதன் தொடர்பில் இணக்கம் கண்டுள்ளன.
ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளுதல், கட்டாய தேசிய சேவையை முடிவுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட 23 அம்சங்கள் தொடர்பில் அக்கட்சிகள் இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளன.
இருப்பினும் அரச குடும்பத்தினருக்கு எதிராக அவதூறு பேசிய குற்றத்துக்கு 15 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து அந்த இணக்கக் குறிப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று ஊடகங்கள் கூறின.
இம்மாதம் 14ஆம் தேதி தாய்லாந்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில் 'மூவ் ஃபார்வர்ட்' கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றது. அதன் தலைவர் பிட்டா லிம்ஜரோன்ராட் பிரதமர் பொறுப்பை ஏற்பதற்கு கூட்டணி ஆதரவளிக்கிறது. அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானது அரச குடும்பத்துக்கு எதிரான அவதூறு தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத்தில் திருத்தம் செய்தல்.
500 இடங்களைக் கொண்ட தாய்லாந்து நாடாளுமன்றத்தில் எட்டுக் கட்சிகள் கூட்டணி 313 இடங்களைப் பெற்றுள்ளது. 250 செனட்டர்கள் வாக்களிப்பதன் அடிப்படையிலேயே பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
வாக்களிப்பு நிறைவடைந்து 60 நாள்களுக்குப் பிறகே தாய்லாந்துத் தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்கும். அதன் பிறகு நாடாளுமன்றம் கூடிப் பிரதமரைத் தேர்ந்தெடுக்கலாம். அரச குடும்பத்துக்கு எதிரான அவதூறுக்கு சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத்தில் திருத்தம் செய்தல் தொடர்பில் செனட்டர்கள் சிலர் ஏற்கெனவே திரு பிட்டா பிரதமர் பதவி ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

