காற்பந்து விளையாட்டாளர்களுக்குத் தடை விதித்த தாய்லாந்து
பேங்காக்: இந்த ஆண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பங்கேற்ற தாய்லாந்து காற்பந்து அணியின் விளையாட்டாளர்கள் இருவர், பயிற்றுவிப்பாளர் ஒருவர், அதிகாரிகள் இருவர் ஆகியோருக்கு நீண்டகாலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்காசிய விளையாட்டுகளின் ஆண்கள் காற்பந்துப் போட்டி இறுதியாட்டத்தில் தாய்லாந்தும் இந்தோனீசியாவும் மோதின. அந்த ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் இடையே இரண்டு முறை மோதல் ஏற்பட்டது. இரு அணிகளையும் சேர்ந்த விளையாட்டாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள், அதிகாரிகள் ஆகியோர் சண்டையிட்டனர். அதைத் தொடர்ந்து தாய்லாந்து காற்பந்துச் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இம்மாதம் 16ஆம் தேதி நடைபெற்ற இறுதியாட்டத்தில் தாய்லாந்தின் மூன்று விளையாட்டாளர்கள் சிவப்பு அட்டை காண்பித்து நீக்கப்பட்டனர். கூடுதல் நேரத்தில் 5-2 எனும் கோல் கணக்கில் வெற்றிகண்டு தங்கப் பதக்கத்தை வென்றது இந்தோனீசியா.
20 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கில் நியூகாசல் அணி
நியூகாசல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான நியூகாசல் யுனைடெட் 20 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. பிரிமியர் லீக்கில் லெஸ்டர் சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் நியூகாசல் கோலின்றி சமநிலை கண்டது. அதைத் தொடர்ந்து லீக் பட்டியலில் நியூகாசல் முதல் நான்கு இடங்களுக்குள் வருவது உறுதியானது. பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் வரும் குழுக்கள் அடுத்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக்கில் போட்டியிடும். புதிய உரிமையாளர்களின் தலைமையில் மேன்மேலும் உயர்ந்து வந்துள்ளது நியூகாசல். நிர்வாகி எடி ஹாவும் குழுவை மிகச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

